தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ... என்று அன்றைக்கே சொல்லிவிட்டனர். இன்று, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது... கூலி, சேதாரத்தையும் சேர்த்தால்... நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.ஓ படத்தில், செல்ஃபோன்கள் பறக்கிற மாதிரி, தங்கம், வெள்ளி விலை உச்சத்துக்கு போய் கொண்டிருக்கிறது. தினந்தோறும் விலையைக் கேட்டால், கையில் இருக்கும் குண்டுமணி தங்கத்தையும், 2 கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு தான் தூங்க போக வேண்டும் போலிருக்கிறது. என்ன தான் ஆச்சு, தங்கம் வெள்ளிக்கு, ஏனிந்த உச்சம்? மாத சம்பளம் இல்லை எனில், சில்லறை வியாபாரத்தில் இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தங்களின் பொருளாதாரத்திற்காக, வீட்டு உத்தரத்தை பார்த்து யோசித்தால், பெரும் பணக்காரர்கள், நிதி நிறுவனங்கள், வல்லரசு நாடுகள் எவ்வளவு யோசிப்பார்கள்? இந்த யோசனையின் விளைவு தான், விலை உச்சம். இந்த பூமியில் நடக்கும் அரசியல் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய வங்கிகளின் கொள்முதல், வலுவான முதலீடு, இதெல்லாம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. . குறிப்பாக, ”பிக் பிரதர்ஸ்” என்று அடையாளப்படுத்தி வரும், அமெரிக்காவும், சீனாவும் என்ன என்னவெல்லாம், செய்கிறது தெரியுமா? கேட்டாலே ஷாக் அடிக்கும். சீனா மீது அமெரிக்கா 100 சதவீதம் கூடுதல் வரியை அறிவித்த பிறகு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் எழுந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக, சீனா ஒரு நாள் கூட விடாமல், துரத்தி துரத்தி தங்கத்தை வாங்கி குவிக்கிறது. அதாவது, 2025 ஆகஸ்ட் வரை, சீனாவின் கையிருப்பில் உள்ள தங்கம், சுமாராக 74 மில்லியன் அவுன்ஸ். அதாவது, சுமார் 20.97 லட்சம் கிலோ. இதன் மதிப்பு சுமார் 254 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பு, தலை சுற்ற வைத்து விடும். சீனாவின், தங்கத்தின் மீதான மோகம், கிறுகிறுக்க வைக்கிறது. அமெரிக்காவை பழி வாங்க, சீனா, ஆழமாக குழி தோண்டி, அதில் தங்கத்தை நிரப்பி வைத்திருக்கும் போல... தங்கம், வெள்ளி மட்டுமல்ல, விலை மதிப்பற்ற உலோகங்கள் எல்லாமே தாறுமாறாக ஏறிக் கொண்டு செல்கிறது. சர்வதேச சந்தையில், பிளாட்டினம் 1,630 டாலர், பல்லேடியம் 1,445 டாலர் என்ற அளவில் உள்ளது. ஆனால், இந்த விலை உயர்வெல்லாம், சீனாவை பாதிக்கவில்லை. உலக பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்க, சீனா அமைதியாக, திட்டம் போட்டு, காய் நகர்த்தி, உலக பொருளாதார அடித்தளமான தங்கத்தை மிகப் பெருமளவில் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்வது தான். அடி மடியிலேயே கை வைத்துள்ளது. அதிர வைக்கும் தங்கத்தின் விலை.அடுத்து, அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று காக்க வைத்துள்ளது. ஆனால், அமெரிக்க அரசாங்க முடக்கம், பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கால கட்டம், அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்துவதால், நிச்சயமற்ற தன்மை கூடி இருக்கிறது. இது ஒரு புறமிருக்க...The Multi Commodity Exchange of India Limited அதாவது, MCX, வர்த்தகம் தொடர்பாக ஒரு முக்கிய முடிவை அமல்படுத்தி உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் மாத டெலிவரிக்கான எதிர்கால ஒப்பந்த விலை 1.84 சதவீதம் உயர்ந்து, 10 கிராம் தங்கம், ரூ.1,26,930 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பிப்ரவரி 2026ஆம் ஆண்டு, டெலிவரிக்கான தங்க ஒப்பந்தமும், 1.94 சதவீதம் உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.1,28,220 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களில், லாப வரம்பை அதிகரிப்பதாக, எம்சிஎக்ஸ் அறிவித்துள்ளது. இதெல்லாம், எம்சிஎக்ஸ்-ன் ஒரு புள்ளிக் கணக்காக தெரிந்தாலும், வயிற்றில் புளியை கரைக்க தான் செய்கிறது. இதுவே இப்படி என்றால், comex விடுமா?அமெரிக்காவில் உள்ள COMEX அதாவது, Commodity Exchange என்பது, தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்களை வர்த்தகம் செய்யும் ஒரு முதன்மையான, futures மற்றும் options சந்தை. இது உலகளவில் உலோக வர்த்தக முக்கிய அளவுகோலை நிர்ணயிக்கிறது. குண்டு மணி தங்கம் வாங்குறதுக்கு, இதெல்லாமா? என்று, ஏழை, எளிய, மக்களை புலம்ப வைத்துள்ளது. Comexல் வரும் டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்கம் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 4,190.67 டாலராக உள்ளது. டிசம்பர் மாத டெலிவரிக்கான வெள்ளி 4 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 52.49 டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஆக, தங்கம், வெள்ளி விலை குறையுமா? என்று இனி யாரும் கேட்க முடியாது?இன்று, தங்கம் வாங்க ஆயிரத்தெட்டு முறை சாமானிய மக்கள் யோசிக்கின்றனர். எல்லாம் பட்ஜெட் தான்.இங்கே சிலர், எதிர்கால தங்கம், வெள்ளி விலையை இன்றே நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்நிலையில, இந்தியாவுக்கு வருவோம். இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆன MCX ஒரு அதிரடி முடிவை அமல்படுத்தி இருக்கிறது. அதாவது, தங்கம், வெள்ளி தொடர்பான எதிர்கால ஒப்பந்தங்களில், லாபத்தை அதிகரிப்பதாக அறிவித்து, அக்டோபர் 14ஆம் தேதி முதல், அமலுக்கும் வந்துள்ளது. இதன்படி, தங்கத்தின் மீதான லாப வரம்பு 1% அதிகரித்து 7% ஆக உள்ளது. வெள்ளி விலையும், குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்திப்பதால், இந்த நடவடிக்கை ரிஸ்க் மேனேஜ்மெண்டின் ஒரு பகுதி என்று MCX அறிவித்துள்ளது. இந்த நடைமுறை சாதாரணமாக தங்கம், வெள்ளி வாங்குபவர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ பொருந்தாது. எதிர்கால சந்தையில் தங்கத்தை வாங்குவோருக்கு பொருந்தும். இதற்கு முன்னால், தங்கத்தில் வர்த்தகம் செய்ய குறைவான பணம் போதும், ஆனால், தற்போது விலை உச்சத்தில்... இந்த நடைமுறை, அதிக அந்நியச் செலாவணி கொண்ட முதலீட்டாளர்களை அல்லது பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களை நேரடியாகப் பாதிக்கும். சில பெரிய முதலீட்டாளர்கள், இதை பயன்படுத்தி குறைந்த விலைகளில் அதிக வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ளது. இது, தேவையை அதிகரிக்கும். இதனால், தங்கம் விலை இன்னும் உயரத் தான் செய்யுமாம்... தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அமெரிக்கா, சீனா இடையேயான Trade War தான் பிரதானம். இந்த டிரேட் வார், இந்த போர், பெரிய அக்கப்போராக மாறி உள்ளது. அமெரிக்கா, சீனா நாட்டு பிரதர்ஸ்... கொஞ்சம் ஓரமாக போய் சண்டை போடுங்கப்பா... ஏழை, எளிய. நடுத்த மக்கள் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்கட்டும்.