நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், திடீரென அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது. படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வில்லத்தனமாக வசனம் பேசுவது போல் காட்டியிருப்பதோடு, வரலாற்றை மாற்றி இஷ்டத்திற்கு படம் எடுத்திருப்பதாக காங்கிரஸ் கொந்தளிக்கும் நிலையில், இதனால் பராசக்தி படத்திற்கு தடை விதிக்கப்படுமா? சினிமாவை தாண்டி திமுக கூட்டணியிலும் இதன் தாக்கம் இருக்குமா? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை அலசி ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.உட்கட்சி பூசல், தொடர் தேர்தல் தோல்வி என எப்பேற்பட்ட பிரச்சனை வந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் கும்பகருணனுக்கே டஃப் கொடுத்து தூங்குவதாக விமர்சிக்கப்பட்ட காங்கிரசை வெறும் 3 மணி நேர படத்தின் மூலம் கடுப்பேற்றி விட்டிருக்கிறதாம் பராசக்தி படக்குழு.சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்தது பராசக்தி திரைப்படம். 1960-களில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும், அதனால் தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை பற்றியும் பேசும் படமாக பராசக்தி அமைந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் இந்தி திணிப்பை மட்டும் பார்த்து வளர்ந்த இன்றைய இளம் தலைமுறைக்கு, இதனை முன்னரே கையில் எடுத்து தோல்வி கண்ட காங்கிரசின் முயற்சியை பராசக்தி ஆழமாக எடுத்துக் கூறுவது, கதர் சட்டைக்காரர்களுக்கு மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.அதிலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படத்தில் வில்லத்தனமாக சித்தரித்திருப்பதாக சொல்லப்படுவது காங்கிரஸார் மத்தியில் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கொந்தளிக்கும் காங்கிரஸ் மாநில முதன்மை துணைத் தலைவர் அருண் பாஸ்கர், முழுக்க முழுக்க காங்கிரசை குறிவைத்து தாக்கும் நோக்கத்துடன் பல பொய்களை சேர்த்து படம் எடுக்கப் பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 1965களில் தபால் நிலையங்களில் இந்தியில் மட்டும் தான் படிவங்கள் நிரப்பப்பட வேண்டும் என காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக படத்தில் சொல்லப்பட்டிருப்பது கட்டுக்கதை என்றும், இன்னும் ஒருபடி மேலாக அதே ஆண்டு பிப்ரவரியில் கோவைக்கே வராத இந்திரா காந்தியின் கண்முன் ரயிலை கொளுத்தி இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து போட வைத்ததாக படத்தில் காட்டுவதெல்லாம் வரலாற்றில் நடைபெறாத சம்பவங்கள் என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட தமிழர்களை இரக்கமின்றி காங்கிரஸ் அரசு சுட்டுக் கொன்றதாக ஆதாரமே இல்லாத புகார்களை படத்தில் அடுக்கியிருப்பதாக கோபக் கடலில் பொங்கிய அவர், உண்மைக்கு புறம்பான காட்சிகளை படத்தில் இருந்து நீக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பராசக்தி படக்குழுவை கடுமையாக எச்சரித்திருக்கிறார்.தமிழகத்தில் தங்களது ஆட்சி அமைய காரணமாக இருந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசும் படம் என்பதால் பராசக்தியை திமுக கொண்டாடி வரும் சூழலில், மறுபுறம் கூட்டணியில் இருந்து கொண்டு படத்தை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியிருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றதாக பராசக்தி படம் பற்ற வைத்திருக்கும் தீ, எந்தளவுக்கு பரவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதையும் பாருங்கள் - தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு