கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு, அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை இருப்பது, குறுகிய அளவிலான சாலைகள் இருப்பது போன்ற காரணங்களை குறிப்பிட்டு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், பின்னணி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.சென்னையை அடுத்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கோவையில் அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மதுரையில் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாயிலும், கோவையில் 10 ஆயிரத்து 740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அரசு திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தது. பின்னர், மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட அறிக்கையை கடந்த 10 மாதங்களுக்கு முன் அனுப்பியது மாநில அரசு. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு.பிரதமர் மோடி கோவை வந்திருந்த சமயத்தில், மெட்ரோ ரயில் அனுமதிக்கான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது பூதாகரமானது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக வஞ்சிக்கிறதுஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுகவின் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியது, அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர்த்து, கோவைக்கு வந்த பிரதமர் மோடியிடம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை மனு அளித்தார்.இதனிடையே, தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையில் மத்திய அரசு வஞ்சித்து இருக்கிறது என த.வெ.க.வும் குற்றம்சாட்டியிருந்தது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்? என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோவின் PHASE ONE மூலம் தினமும் சராசரியாக 4 லட்சம் பேர் பயணித்து வரும் நிலையில், கோவையில் 34 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தினமும் 5.9 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்பது அதீத மதிப்பீடாக இருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், உக்கடம் - கோவை சந்திப்பு, கோவை சந்திப்பு - ஹோப்ஸ் கல்லூரி, கோவை சந்திப்பு - ராமகிருஷ்ணா மில்ஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் முக்கால்வாசி சாலைகள் 20 மீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டிருக்கிறது எனவும், சில இடங்களில் 15 மீட்டருக்கும் குறைவாகவும் இருக்கிறது எனவும் கூறியுள்ள மத்திய அரசு, இவ்வளவு குறுகலான சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகாது என தெரிவித்துள்ளது.மேலும், தமிழக அரசு கொடுத்த திட்ட அறிக்கையை செயல்படுத்தினால் அதிகளவில் பொதுமக்களின் சொத்துக்களை இடிக்க நேரிடும் என்பதோடு, பொருட் செலவும் அதிகமாக தேவைப்படும் என மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கோவை நகரில் 15.84 லட்சம் மக்கள் தொகையும், மதுரை நகரில் 15 லட்சம் மக்கள் தொகையும் இருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது என்ற மத்திய அரசு, "மெட்ரோ ரயில் கொள்கை 2017ன்படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தான் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.கோவை, மதுரைக்கு செழிப்பான பேருந்து வசதி அல்லது BRTS என்று சொல்லக்கூடிய அதிநவீன பேருந்துகள் இயக்கம் போன்றவையே தகுந்தவையாக இருக்கலாம் என்பதால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாக கூறி, மெட்ரோ ரயில் திட்டம் திருப்பி அனுப்பியது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட், பாட்னா, போபால் உள்ளிட்ட நகரங்களின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்த போதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.இன்னொரு பக்கம், கோவை, மதுரையின் 2025ஆம் ஆண்டுக்கான உத்தேச மக்கள் தொகையை குறிப்பிட்டு மீண்டும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.மேலும், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் சுற்றுலாவை காரணம் காட்டி தான் மெட்ரோவுக்கு அனுமதிக்கப்பட்டது என்ற நிலையில், அது மாதிரியான காரணங்களை கோவை, மதுரைக்கு குறிப்பிட்டு விண்ணப்பிக்கும் போது மீண்டும் அனுமதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும்சொல்லப்படுகிறது.மெட்ரோ ரயில் கொள்கைகளுக்கு ஏற்றவாறு திட்ட அறிக்கையை தயாரிக்காமல் அனுப்பியதாலேயே திருப்பி அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.