கரூர் விவகாரம் குறித்துப் பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? என, எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 2ஆம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் முன் அமர்ந்து, இபிஎஸ் தர்ணாவில் ஈடுபட்டார்.பின்னர், அதிமுக உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக முழுக்கமிட்டபடி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். செங்கோட்டையன், முன்பே சென்றுவிட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யவில்லை. அதிமுகவை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது:முதல்வர் பேசியதை நாங்கள் அமைதியாக கேட்டோம். ஆனால், சபாநாயகர் நாங்கள் பேச உரிய அனுமதி கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு, முதல்வர் பதில் அளிப்பது தான் மரபு.தவெக தலைவர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பத்து நிமிடம் தான் பேசியிருப்பார், அப்போது ஒரு காலணி வந்து அங்கு விழுகிறது. இதுகுறித்து அரசு ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்வர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு. இதனால் தான் கரூர் சம்பவத்தில், சந்தேகம் எழுகிறது. கரூர் சம்பவத்திற்கு, அரசின் அலட்சியமே காரணம். எவ்வளவு பேர் கூடுவார்கள் என உளவுத்துறைக்கு தெரிந்திருக்கும். ஆனாலும், போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.சட்டப்பேரவையில், பேச முடியாததை இப்போது செய்தியாளர்களிடம் பேசுகிறேன். ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவுக்கு எதற்காக அரசு கொடுத்தது? கரூர் சம்பவத்தில் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு அவ்விடத்தை கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். ஏதோ உள்நோக்கத்தோடு தான் இந்த இடம் கொடுக்கப்பட்டது. போலீசாரின் கவனக்குறைவே கூட்ட நெரிசலுக்கு காரணம். எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், இப்படி நடந்திருக்காது.கரூர் சம்பவத்தில் வேகம் காட்டும் முதல்வர், கிட்னி திருட்டு விவகாரத்தில் ஏன் வேகம் காட்டவில்லை? கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம். கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதனால் தான் நான் பேசும்போது, ஒவ்வொரு அமைச்சரும் எழுந்து பதில் சொல்கிறார்கள். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை நினைத்து ஆளும்கட்சி பயப்படுகிறது. ஒரு அரசியல் கூட்டத்தில் 41 பேர் இறந்தது, இந்தியாவிலேயே இது தான் முதல்முறை. அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும்? உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது. ஒரு நபர் ஆணையம் என்பது உண்மையை மறைக்கும் முயற்சி. இவ்வாறு சட்டப்பேரவைக்கு வெளியே, இபிஎஸ் பேசினார்.