நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி அதிவிரைவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்துக்கு, பணியாளர்கள் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கிரீன் சிக்னல் இருந்தும் மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயில் லூப் லைனுக்குள் நுழைந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து சுமார் 1,600 பயணிகளுடன் தர்பங்கா நோக்கி பாக்மதி அதிவிரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. சரியாக 8.15 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த சில நிமிடங்களிலேயே ஏற்கனவே, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. சுமார் 10 பெட்டிகள் துண்டு, துண்டாகக் கழன்று நாலாபுறமும் சிதறின. இந்த நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கலாம் என பல கோணங்களில் விசாரணை நீள்கிறது. அந்த வகையில், ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் MAIN LINE-ல் செல்ல வேண்டிய பயணிகள் ரயில், திடீரென லூப் லைனுக்கு மாறியதே என்பது தெரியவந்துள்ளது. மெயின் லைனில் வந்து கொண்டு இருந்த ரயில் லூப் லைனில் மாறியது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மைக் காலத்தில், தண்டவாளங்களில் கற்கள் போன்ற பொருட்களை வைப்பது, தண்டவாள இணைப்புகளைக் கழற்றுவது என, பல செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், ரயில்களை கவிழ்க்க சதித்திட்டம் எதுவும் இதன் பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்தது.ஆனால் 8.29 மணியளவில் விபத்து நிகழ்ந்த நிலையில், 8.26 மணிக்கு, செண்ட்ரலில் இருந்து சூலூர் பேட்டைக்கு அதே வழித்தடத்தில் மின்சார ரயில் ஒன்று சென்றிருக்கிறது. ஆகையால், 3 நிமிடங்களில் சதித்திட்டம் அரங்கேற வாய்ப்பு குறைவு என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் லூப் லைனுக்குள் செல்லும் போது, 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது என்ற நிலையில், வேகம் அதிகமாக இருந்திருந்தால், எத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு கடந்த ஆண்டு ஒடிசாவில் அரங்கேறிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தே உதாரணம்...!கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டு மெயின் தண்டவாளங்கள், இரண்டு லூப் தண்ட வாளங்கள் இருக்கும் நிலையில், INTER LOCK, சிக்னல் கோளாறு போன்ற பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, விபத்து குறித்து நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், பைலட் சுப்பிரமணி, ரயில் நிலைய மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பணியாளர்களின் கவனக் குறைவு தான் ரயில் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, பயணிகள் ரயில் லூப் லைனில் நுழையும் முன்பே பயங்கர அதிர்வு ஏற்பட்டு, ரயில் குலுங்கியுள்ளது. இதற்கு பிறகு லூப் லைனிற்குள் ரயில் நுழைந்திருக்கிறது. அந்த வகையில், லூப் லைனிற்குள் செல்லும் முன்பே ரயில் ஏதேனும் தடம்புரண்டதா? தடம் புரண்ட காரணத்தினால் தான் ரயில் லூப் லைனிற்குள் சென்றதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 200 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 351 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துகளில் சிக்கியவர்களுக்கான இழப்பீடாக மட்டுமே இந்திய ரயில்வே கடந்த ஐந்துஆண்டுகளில் 32 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் செல்லும் ரயில் பயணம் குறித்து ஒவ்வொரு விபத்தின் போதும் கேள்விகள் எழும்...முக்கியமாக, சிக்னல் கோளாறு, வழித் தடத்தில் இடையூறு போன்றவை இருந்தால் கண்டுபிடித்து முன்கூட்டியே தகவல் கொடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக அனைத்து ரயில்களிலும் நிறுவப்படவில்லை என்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அதோடு, ரயில் விபத்துக்களை தடுக்க, இந்தியாவிடம் நவீன தொழில்நுட்பம் எதுவும் கைவசம் இல்லை என்பதும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.