த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், பைபிளை மேற்கோள் காட்டி சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளி விடப்பட்ட இளைஞன், பிற்காலத்தில் அரசன் ஆன கதையை நம்பிக்கைக்கு அடையாளமாக குறிப்பிட்டார். விஜய் குறிப்பிட்ட இளைஞன் யார்? குட்டி கதை மூலம் விஜய் உணர்த்திய செய்தி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பாழுங்கிணற்றில் தள்ளி விடப்பட்ட இளைஞன், நாட்டையே வழிநடத்தியதாக விஜய் குறிப்பிட்ட அந்த இளைஞர் யார்? என இணையம் முழுக்க தேடல் அதிகரித்து வருகிறது.கட்சி தொடங்கி, 2 ஆண்டுகளில் முதன்முறையாக த.வெ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற விஜய், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்றாலும், பைபிளில் வரும் ஒரு கதையை மேற்கோள் காட்டி சூசகமாக அரசியல் பேசினார். அதாவது, ஒரு இளைஞனுக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு, பாழுங்கிணற்றில் அவனை தள்ளி விட்டதாகக் குறிப்பிட்ட விஜய், பிற்காலத்தில் அந்த இளைஞன் நாட்டுக்கே அரசன் ஆகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்லாமல், நாட்டையே காப்பாற்றியதாக குறிப்பிட்டார்.கதையை குறிப்பிட்டது மட்டுமல்லாமல், அந்த இளைஞன் யார்? என்று தாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை என சஸ்பென்ஸ் வைத்து பேசினார் விஜய்.அதாவது, விஜய் பேச்சில் குறிப்பிட்ட இளைஞன் பெயர் ஜோசப். யாக்கோப்பின் 12 மகன்களில் ஜோசப்பும் ஒருவர் என்ற நிலையில், ஜோசப் மீது யாக்கோப்பு கொண்டிருக்கும் அலாதி பிரியத்தை பார்த்து மற்ற மகன்களுக்கு பொறாமை வந்திருக்கிறது.ஒரு நாள் ஆடு மேய்க்க சென்ற தங்களை தேடி வந்த தம்பி ஜோசப்பை, சொந்த சகோதரர்களே வழி போக்கர்களாக வந்த எகிப்து நாட்டு வணிகர்களுக்கு அடிமையாக விற்று விடுகிறார்கள். எகிப்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜோசப்பை, அரசனின் மெய்க் காப்பாளனுக்கு வணிகர்கள் விற்று விட, அந்த மெய்க்காப்பாளனின் நம்பிக்கைக்குரியவனாக மாறுகிறார் ஜோசப்.பின்னர், மெய்க்காப்பாளனின் மனைவி செய்த சூழ்ச்சியில் சிறையில் தள்ளப்படும் ஜோசப், கனவுக்கு விளக்கம் சொல்லும் திறமை மூலம் எகிப்து நாட்டு அரசன் கண்ட கனவுக்கு விளக்கம் சொல்ல வருகிறார். அப்போது, ஏழு ஆண்டுகளில் எகிப்து நாட்டில் பஞ்சம் வரப் போகிறது என்பது தான் அரசனின் கனவுக்கு ஜோசப் சொன்ன விளக்கம். அதிலிருந்து தப்பிக்க அரசனுக்கு யோசனையும் கொடுத்தார்.பஞ்சம் வருவதற்குள் தானிய கிடங்குகளை கட்டி, முடிந்த அளவுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைக்கலாம் என்ற ஜோசப்பின் யோசனையைக் கேட்டு வியந்து போன அரசன், எகிப்து நாட்டின் ஆளுநர் பொறுப்பில் ஜோசப்பை நியமித்ததாக பைபிளில் கூறப்படுகிறது.எகிப்தின் முழு அதிகாரத்தை கையில் வைத்திருந்தாலும், பிற்காலத்தில் தனக்கு துரோகம் செய்த சகோதரர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வர அவர்களை மன்னித்து அரவணைத்து ஏற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில், எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஜோசப் கடவுள் மீது வைத்த நம்பிக்கை தான் அவரை எகிப்து ஆளுநர் என்ற இடத்திற்கு உயர்த்தியது எனவும், துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கும் மனப்பக்குவம் ஜோசப்புக்கு இருந்தது என்பதற்காக பைபிளில் சொல்லப்படும் இந்த கதையை விஜய் தனது கிறிஸ்துமஸ் விழா பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, என்னதான் அதிகாரம் கையில் இருந்தாலும், நமக்கு ஒருவர் செய்ததை, நாமும் அதையே அவருக்கு செய்யக் கூடாது என்பதையும் விஜய் குறிப்பிட்ட பைபிள் கதை வலியுறுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, பைபிளில் வரும் ஜோசப் என்ற இளைஞனாக தன்னை உருவகப்படுத்தித் தான் விஜய் பேசியதாக அவரது பேச்சு பார்க்கப்படுகிறது. எவ்வளவு போராட்டமாக இருந்தாலும், எதிரி யாராக இருந்தாலும் ஜெயிப்பேன் என்ற அர்த்தத்தில் விஜய் அந்த கதையை குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க, விஜய் அரசியலுக்கு வரும் முன்பு அவரது வாக்காளர் அடையாள அட்டையின் புகைப்படம் வெளியாகி அதிலிருந்த அவரது ஜோசப் விஜய் என்ற பெயரை வைத்து பெரிய பூகம்பம் கிளம்பி விவாதங்களும் அரங்கேறின. மெர்சல் பட வெளியீட்டில் பாஜக கொடுத்த குடைச்சல் காரணமாகவே ஒரே ஒரு முறை மட்டுமே தன்னை ஜோசப் விஜய் என அடையாளப்படுத்தி அறிக்கை விட்ட விஜய், அதன் பிறகு எங்கேயும் தனது முழு பெயரை சொல்லவில்லை. இந்த நிலையில், தவெகவின் கிறிஸ்துமஸ் விழாவில் ஜோசப்பின் கதையை விஜய் சொன்னது அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.