சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதால் மாநிலக்கல்லூரியை சேர்ந்த அப்பாவி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் மரணம் சக மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் காலங்காலமாக இருந்து வரும் ரூட் தல பிரச்சனையை தீர்க்கமுடியாத நிலை நீடிக்கும் நிலையில், இந்த அவலம் தற்போது கொலை வரை சென்று மாணவர்களை பீதியடையச்செய்துள்ளது...வரலாற்று புகழ்பெற்ற இவ்விரு கல்லூரிகளுக்கும் எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் ரூட் தல என்ற ஒற்றை சொல் சிறுநொடியில் அவைகளை சிறுமைப்படுத்திவிடுகிறது. குறிப்பாக பெருமைமிகு இந்த கல்லூரிகளின் அடையாள அட்டைகளை அணிவதற்கு கூட மாணவ மாணவிகள் அச்சப்படுகின்றனர். காரணம் மாநிலக்கல்லூரி ID Card அணிந்திருந்தால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்துவதும், பச்சையப்பன் கல்லூரி ID Card அணிந்திருந்தால் மாநிலக்கல்லூரி மாணவர்கள் அடிப்பதும் எழுதப்படாத விதியாகவே உள்ளது. ஒரு சில ரவுடி மாணவர்களால் அப்பாவி மாணவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.இதனிடையே மாநிலக்கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த சுந்தர் என்ற மாணவர், கல்லூரி முடித்துவிட்டு திருத்தணியில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக தனது நண்பர்களுடன் செண்ட்ரல் நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்தசமயத்தில் அங்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர், சுந்தரையும் அவரது நண்பர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மற்ற இரு மாணவர்கள் தப்பியோடிய நிலையில், சுந்தரை மட்டும் எதிர்தரப்பு மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுந்தரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த ஐந்து நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுந்தர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனிடையே, தன் தம்பி ஐடி கார்டு போட்டிருந்ததாலேயே அடித்துக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தன்று ஒரு போலீஸ் கூட அங்கு பணியில் இல்லையா என ஆதங்கத்துடன் சுந்தரின் அக்கா கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.சுந்தரின் இறப்பு செய்தி மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அனைத்து துறைகளிலும் வகுப்புகளை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் ராமன், இனி இது போன்ற அசம்பாவிதம் நிகழாத வண்ணம், மற்ற கல்லூரி முதல்வர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், கல்லூரிக்கு திங்கள் கிழமை வரை விடுமுறை அறிவித்தார். இதனிடையே, மாணவர் சங்க தேர்தலை நடத்தாமல் இருப்பதே வன்முறை சம்பவங்களுக்கு வித்திடுவதாகவும், மாணவர்கள் சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் சிந்திக்க தொடங்கினால் இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழாது என்றார். இந்நிலையில்,சுந்தரைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ் , ஈஸ்வர், மு.ஹரிபிரசாத், கி.கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். படிக்க வேண்டிய வயதில் இப்படி அடிதடியில் இறங்கி தன் வாழ்க்கையை தொலைப்பதோடு மட்டுமல்லாமல், இப்படி அப்பாவி மாணவரின் உயிரையும் பறித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.