கரூர் கூட்ட நெரிசலுக்கு, அந்த தனி நபர் மட்டுமே காரணம் அல்ல, நாம் அனைவருமே காரணம் தான் என்று, நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசல் காரணமாக, தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம் அனைவருமே காரணம் தான். ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூட கூட்டம் வருகிறது. ஆனால், அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லை. இது ஏன் தியேட்டர்களில் மட்டும் நடக்கிறது? பிரபலங்கள், திரைக் கலைஞர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் கூட இதையெல்லாம் விரும்புவதில்லை.எங்களுக்கு அந்த அன்பு தேவை தான். அதற்காகத் தான் கடுமையாக உழைக்கிறோம். குடும்பத்தை விட்டு பிரிந்து, நீண்டநேரம் படப்பிடிப்பு தளங்களில் இருக்கிறோம், ஒரு படத்தை உருவாக்க காயங்களை அனுபவிக்கிறோம், மன அழுத்தம், தூக்கமில்லாத இரவுகளை கடக்கிறோம். இவை அனைத்தும் எதற்காக? ரசிகர்களின் அன்புக்காகத் தான். ஆனால், அந்த அன்பைக் காட்ட வேறு வழிகள் உள்ளன. முதல் நாள் முதல்காட்சி கலாச்சாரத்தை ஊக்குவிக்க கூடாது என்று நினைக்கிறேன்.இவ்வாறு நடிகர் அஜித் கூறி உள்ளார். இந்த நிலையில், "கூட்டம் கூட்டுவது பெருமை என்கிற அதீத மன நிலை கொண்ட சமூகமாக, இன்று நாம் மாறியிருக்கிறோம். இது முடிவுக்கு வரவேண்டும்" என அஜித் கூறியுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகர் அஜித் குமார் கூறியுள்ள கருத்து, சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. "மக்கள் மீது அன்பு கொண்டவரின் உண்மையான கருத்து" என பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதையும் பாருங்கள் - கரூர் பெருந்துயரம், விஜய் காரணமல்ல, அஜித் ஓபன் டாக் | Ajith about TVK Karur Stampede