அண்மையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு சென்று பார்த்து எழுதியதாக கூறப்படும் நிலையில், தேர்வு முறைகேடுக்கு பின்னணியில் பெரிய சிண்டிகேட் கூட்டமே செயல்பட்டு வருவதாக கூறப்படுவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தமிழகம் முழுவதும் 2ஆம் நிலை காவலர் தேர்வு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப் படுகிறது. காவல்துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக இருக்கும் பணியிட ங்களை நிரப்ப நடத்தப்படும் 2ஆம் நிலை காவலர் தேர்வு, கடந்த நவம்பர் 9ஆம் தேதி நடந்து முடிந்தது.மொத்தம் 3 ஆயிரத்து 665 பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்காக இரண்டரை லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 45 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை சரிபார்ப்பு முறையும் அறிமுகம் செய்யப்பட்டது.ஆனாலும் கூட, பல தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டம் பாரத் மாண்டிசோரி பள்ளியில் போட்டிருந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் செல்போனை கையில் எடுத்துச் சென்று தேர்வு எழுதியதாக சொல்லப்படுகிறது. தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு தான் தேர்வு அறைக்குள் அனுப்பப்படுவார்கள் என்ற நிலையில், அதையும் மீறி செல்போன் கொண்டு செல்லப்பட்டு வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்து வெளியில் இருந்து பதிலை வாங்கி பார்த்து எழுவதாக கூறப்படுகிறது.தென்காசி மட்டுமின்றி இதே மாதிரி பல தேர்வு மையங்களில் செல்போனை எடுத்துச் சென்று பார்த்தே தேர்வு எழுதியதாக சொல்கிறார்கள். போலீஸ் வேலைக்காக எத்தனையோ லட்சம் பேர் உடலை கட்டுக்கோப்பாக வைத்து, கனவுகளை சுமந்து காத்திருக்கும் நிலையில், இப்படி குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்று வேலையை விலைக்கு வாங்கி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.இந்த தேர்வு முறைகேடுகளுக்கு பின்னணியில் பெரிய சிண்டிகேட் கும்பலே செயல்பட்டு வருவதாகவும் பகீர் கிளப்புகிறார்கள். அதாவது, காவலர் தேர்வுக்கு பயிற்சி மையம் நடத்தும் பெரும்பாலான நபர்கள், காவல்துறையில் பணிபுரிந்து VRS வாங்கி சென்றவர்களாக இருப்பதே இந்த முறைகேடுகளுக்கு முழு முதல் காரணம் என கூறப்படுகிறது. காவல் துறைக்குள் வேலைக்கு வந்து விட்டு உயர் அதிகாரிகளுடன் பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் VRS வாங்கி விட்டு பயிற்சி மையம் தொடங்கி விடுவதாக சொல்லப்படுகிறது.காவல்துறை உயர் அதிகாரிகள் பழக்கம் மூலம் பயிற்சி மையத்தை செல்வ செழிப்பாக வளர்த்து விடுவதோடு, அந்த மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மட்டும் சிறப்பாக கவனிப்பு நடப்பதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே வினாத்தாளை லீக் செய்வது, இல்லை என்றால் தேர்வு அறைக்குள்ளேயே செல்போனை பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதிப்பதாக சொல்லப்படுகிறது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக வருவோருக்கும் பயிற்சி மையத்தில் இருந்து கவனிக்கப்படுவதால் கண்டும் காணாதது போல கண்காணித்து விட்டு காலி செய்து விடுவதால் எங்குமே பிரச்சனை இல்லாமல் முறைகேடு நடக்கிறதாம்.இப்படி, காவலர் தேர்வுக்கான பயிற்சி மையங்களை வைத்தே பெரிய சிண்டிகேட் கும்பலே செயல்பட்டு வரும் நிலையில், விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது. கிராமப்புற, ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானவர்களுக்கு போலீஸ் வேலைக்கு வர வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும் நிலையில், அந்த கனவை சிதைக்கும் வகையில் செயல்பட்டுவரும் சிண்டிகேட் கும்பலை அடையாளம் காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.