அதிமுக எம்எல்ஏவின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல். எம்எல்ஏவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டில் உள்ள நகைகளை திருடிச் சென்று வெறியாட்டம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த அரசு. விசாரணையில் அதிமுக எம்எல்ஏவை சுட்டுக் கொன்றது பவாரியா கும்பல் என அதிர்ச்சி தகவல். பவாரியா கும்பலைச் சேர்ந்த 4 பேரை தொக்காக தட்டித் தூக்கிய தமிழக போலீஸ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கில் வரும் 21ஆம் தேதி தீர்ப்பு... நாட்டையே அதிரவைத்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்குமா? 2005ஆம் ஆண்டு, ஜனவரி 9ம் தேதி, அதிகாலை 2.45 மணி. கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏவா இருந்த சுதர்சனம் தன்னோட வீட்ல நல்லா தூங்கிட்டு இருந்தாரு. அப்ப அவரோட வீட்டுக் கதவ யாரோ உடைக்குற சத்தம் கேட்ருக்கு. இந்த சத்தத்த கேட்டு முதல்ல அவரோட மகன் அறைய விட்டு வெளிய வந்துருக்காரு.அப்ப அவர சுத்துப்போட்ட 6 பேர் கொண்ட கும்பல் அவர சரமாரியா தாக்கி ஒரு அறையில வச்சு பூட்டிருக்காங்க. மகனோட அலறல் சத்தத்த கேட்ட சுதர்சனம் கூச்சலிட்டப்டியே மாடியில இருந்து கீழ வந்துருக்காரு. அப்ப அந்த கும்பல் அவர துப்பாக்கியால சுட்டுருக்காங்க. இதுல எம்எல்ஏ சுதர்சனம் உயிரிழந்துட்டாரு.அதுக்கப்புறம் துப்பாக்கி முனையில 62 சவரன் தங்க நகை, பணம்ன்னு எல்லாத்தையும் கொள்ளையடிச்சுட்டு அந்த கும்பல் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. அதிமுக எம்எல் சுதர்சனம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்துல பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்துச்சு.இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடத்துன விசாரணையில இந்த கும்பல் வடமாநிலங்களைச் சேந்த பவாரியா கும்பல்ன்னு தெரிய வந்துருக்கு. அதுக்கடுத்து இந்த கும்பல பத்தி தெரிஞ்சுக்க போலீசார் தீவிர விசாரணையில இறங்குனாங்க. அதுல தான் பவாரியா கும்பல பத்தி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துச்சு.தென் மாநிலங்கள குறிவச்சு, 1995ம் ஆண்டுல இருந்து 2005ம் ஆண்டு வர கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவத்த தொடர்ந்து பண்ணிக்கிட்டு, போலீஸ் காரங்க கிட்ட சிக்காம வெறியாட்டம் போட்டுட்டு இருந்தாங்க இந்த பவாரியா கும்பல். பவாரியா அப்படின்னா உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்கள்ல உள்ள குறிப்பட்ட பகுதிகள்ல இயங்கிட்டு இருக்குற குற்றவாளிகள குறிக்கும் சொல்ன்னு கூறப்படுது. இவங்க 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாதான் இயங்குவாங்களாம். பெரும்பாலும் கண்டெய்னர் லாரிகள்ளையும், நெடுஞ்சாலை ஓரங்கள்ல தான் இந்த குழு தங்குவாங்களாம். அதுமட்டும் இல்லாம இந்த கும்பல் பொதுமக்கள் கூட வசிக்காம அவங்கள விட்டு விலகி தான் இருப்பாங்க.பொதுவாக, இந்த கும்பலச் சேர்ந்த ஆண்கள் சாலையில போகுற லாரிகளை திருடி, அத வச்சு தான் கொள்ளை சம்பவத்துல ஈடுபடுவாங்க. இவங்க கொள்ளையடிக்க போகும்போது மத்தவங்க இந்த கும்பல பிடிச்சுற கூடாது, யாருக்கும் அடையாளம் தெரிஞ்சுற கூடாது-ங்குறதுக்காக, தங்களோட உடல் மற்றும் முகத்துல களிமண் இல்லன்னா கரிய நிற எண்ணெயை பூசிக்கிட்டு தான் செல்வார்களாம்.அதே மாதிரி பவாரியா கும்பலைச் சேந்த பெண்கள், பகல் நேரத்துல பிச்சை எடுக்குற மாதிரி நடிச்சு, தனியா இருக்குற வீடுகள நோட்டமிட்டு, அந்த வீடு பத்திய தகவல தங்கள் குழுவச் சேந்த ஆண்களுக்கு சொல்லுவாங்களாம். அதுக்கடுத்து அந்த கொள்ளைக் கும்பல் இரவோட இரவா கொடூர ஆயுதங்களான இரும்பு ராடு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகள எடுத்துட்டு வந்து அந்த வீட்ட குறி வச்சு தாக்குவாங்களாம்.வீட்டுல உள்ளவங்க இந்த கும்பலுக்கு பயந்து வீட்ல உள்ள பொருட்கள திருடிட்டு போங்க, ஆனா எங்கள ஒன்னும் பண்ணிறாதிங்கன்னு கெஞ்சுனாலும், அந்த கும்பல் அத காது கொடுத்துக்கூட கேட்காம முதல்ல அந்த வீட்டு ஆண்கள அடிச்சே கொல்லுவாங்களாம். அதுக்கடுத்து இளம்பெண்களை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செஞ்சுட்டு, சில மணி நேரத்துல சுவடே தெரியாத மாதிரி அந்த நகரத்த விட்டு மாயமாகிடுவாங்களாம்.பெரும்பாலும் இந்த கும்பல் கொள்ளையடிக்குறது புறநகர் பகுதியில உள்ள தனியா இருக்குற வீடுகள குறிவச்சு தான். அப்படி தான் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த கும்பல் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டுக்கு கொள்ளையடிக்க போனாங்க. அப்ப அந்த கும்பல பாத்து கத்தி கூச்சலிட்ட சுதர்சனத்த அந்த கும்பல் துப்பாக்கியால சுட்டுக் கொன்னுட்டாங்க.இந்த விவகாரம், தமிழகத்தையே உலுக்கி எடுத்த நிலையில, பவாரியா கும்பல பிடிக்க அப்போதைய கூடுதல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில தனிப்படைய அமைச்சு தமிழக அரசு உத்தரவிட்டுச்சு. அதுக்கடுத்து போலீசார் அந்த கொள்ளையர் பத்தியும், பக்கத்து மாநிலத்துல நடத்துன கொள்ளைச் சம்பவங்கள பத்தியும் அவங்களோட செயல்பாடுகள பத்தியும் தகவல திரட்ட ஆரம்பிச்சாங்க.அப்ப தான் போலீஸ்க்கு அந்த பவாரியா கும்பல் பத்தி தகவல் தெரிஞ்சுருக்கு. ஜாங்கிட் வட மாநிலத்தவர் அப்படிங்-குறதால அவரு உபி போலீஸ் கிட்ட இங்க நடந்த எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிருக்காரு.அதுக்கடுத்து அதே வருஷத்துல தனிப்படை போலீசார், உபி, டெல்லி போன்ற வடமாநிலங்கள்ல முகாமிட்டு, பல மாதங்களா அங்கேயே தங்கி, மாறு வேடத்துல அந்த கொள்ளையர்கள கண்காணிச்சுட்டு இருந்தாங்க. இஸ்திரிக் கடைக்காரப் போலவும், டீ விக்குறவங்க மாதிரியும், லாரி டிரைவர் மாதிரியும் கொள்ளையர்கள பத்தி தகவல சேகரிச்சுருக்காங்க.அதுக்கடுத்து, மறு வருஷமே ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை தங்களோட ஆபிரேஷனைத் தொடங்கிருக்காங்க. ஹரியானாவ சேந்த பவாரியா கொள்ளை கும்பலோட தலைவன தன்னோட ஆதரவாளர்களோட மீரட் பகுதியில உள்ள ஒரு வீட்ல பதுங்கி இருக்குறதா போலீஸ்க்கு தகவல் கிடைச்சுருக்கு.அந்த பகுதிக்கு போன அந்த கும்பல், நம்மள தாக்குவாங்கன்னு நினைச்ச போலீஸ், அதிகாலை நேரத்துல அந்த வீட்ட சூழ்ந்துருக்காங்க. ஆனா இந்த தகவல ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்ட பவாரியா கும்பல், பக்கத்துல உள்ள காட்டுப்பகுதியில பதுங்கிட்டாங்க. இத தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அந்த காட்டுப்பகுதிக்கு போய்ருக்காங்க. அப்ப அந்த கும்பலோட தலைவனும், அவனோட ஆதரவாளர்களும் போலீஸ நோக்கி துப்பாக்கியால சரமாரியா சுட்டுருக்காங்க. அப்ப தமிழக போலீசாரும் பதிலுக்கு அந்த கும்பல சுட்டுருக்காங்க. இதுல பவாரியா கும்பலோட தலைவனும், அவனோட கூட்டாளியும் உயிரிழட்டாங்க. இதபாத்து பயந்துபோன மத்த நபர்கள் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. அதுக்கடுத்து போலீசார் ஹரியானாவச் சேந்த ஓம் பிரகாஷ், ராகேஷ், ஜெகதீஷ், அசோக், ஜெயிந்தர் சிங்ன்னு எல்லாரையும் அரெஸ்ட் பண்ணி தமிழகத்துக்கு கூப்டு வந்து புழல் சிறையில அடைச்சட்டாங்க. இதுல ஓம் பிரகாஷ் சிறையிலயே உயிரிழந்துட்டான். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துல உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விசாரிச்சுட்டு இருந்தாரு. வழக்குல கிட்டத்தட்ட 86 பேரு காவல்துறை சாட்சிகளா விசாரிச்சாங்க. அனைத்து தரப்பு விசாரணையும் முடிஞ்ச நிலையில ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு நவம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது...இதையும் பாருங்கள் - கல்யாண புடவையால் களேபரம், முகூர்த்தத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன், மணமகள் அறையில் நடந்தது என்ன?