திரை உலகில் ஜொலிக்கும் திரை நட்சத்திரங்களுக்கு நடிப்பும் வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது போல, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமாக அமையாமல் சர்ச்சைகள் நிறைந்ததாக இருக்கும். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை கனகா. ரசிகர்களின் பார்வையில் இருந்து விலகி, வெளியுலக வெளிச்சத்தை விரும்பாமல், தனக்கென ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருவதை பற்றி திரையுலக பிரபலங்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகில் 1989ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான கரகாட்டக்காரன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனகா. தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களாக வலம்வந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டவர்களுடன் கதாநாயகியாக நடித்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். தமிழில் தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, பெரிய வீட்டுப் பண்ணக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை கனகா, அதிசயப் பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்த இவர், 90 காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1991ஆம் ஆண்டு சித்திக்-லால் இயக்கத்தில் காட் ஃபாதர் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் 400 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி, மலையாளத் திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. காட் ஃபாதர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனகாவின் நடிப்பு பரவலாக பாராட்டை பெற்றது.திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது, 2002ஆம் ஆண்டு கனகாவின் தாயார் தேவிகாவின் மரணம், அவரை பெரிய அளவில் பாதித்தது. சிங்கிள் பேரண்ட் குழந்தையாக, தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கனகாவுக்கு, அவரது தாயாரின் இழப்பு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை; தாயின் மறைவுக்கு பிறகு நேசக்கரம் நீட்டிய தந்தையின் நம்பிக்கை மோசடி, உடல்நல பாதிப்பு என பல்வேறு இன்னல்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்த கனகா, வெளியுலகில் இருந்து ஒதுங்க தொடங்கினார். கரகாட்டக்காரன் திரைப்பட புகழ் நடிகை கனகா எங்கே? என்று சினிமா உலகம் அவ்வப்போது கேட்கும்போது, அவரை பற்றிய செய்திகள் எட்டிப்பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2023, நவம்பர் மாதத்தில் நடிகை கனகா உடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை குட்டி பத்மினி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது பேசு பொருளாக மாறியது. அட நம்ம கனகாவா இது? என்று கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியிருந்தது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.இந்நிலையில், தற்போது நடிகை கனகாவை சந்தித்தது குறித்து நடிகர் ராமராஜன் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், நடிகை கனகா, தாயாரின் மறைவுக்கு பிறகு, மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், பழைய நினைவுகளை கூட அவர் மறந்து விட்டதாகவும் உருக்கமான குரலில் ராமராஜன் கூறியிருக்கிறார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், “மீண்டு வாருங்கள் கனகா, எங்களுடன் நீங்க இருக்கீங்க!” என்று சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.