அன்புக் கரங்கள், காலை உணவு, மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளிட்டவை, வாக்கு அரசியல் திட்டங்களா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை மேலும் கவனித்துக் கொள்ளத் தான் இந்த அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன், உங்களை பார்த்துக் கொள்வேன். இன்றைக்கு அண்ணாவின் பிறந்த நாள். திராவிட மாடல் என்றால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பாடுபடுவது, அவ்வளவு எளிதானது அல்ல. இந்திய சமூக சூழ்நிலையில், இவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று ஒதுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சியே திராவிட இயக்கம். அதனால் தான் மக்களுடன் மக்களாக, மக்களின் குரலாக, திமுக இன்று ஒலித்து கொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை ஆட்சி பொறுப்பை பயன்படுத்தி, இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களை பொறுத்தவரைக்கும் இங்கு சொகுசுக்கு இடமில்லை. கடும் உழைப்பை கருணாநிதி, அண்ணா, பெரியார் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளனர். மக்களுடன் மக்களாக இருக்கிற காரணத்தினால் தான், கடைக்கோடி மக்களுக்கும் என்ன தேவை என்று எங்களுக்கு பார்த்து பார்த்து செய்ய முடிகிறது. அரசியல் என்றால், பலர் என்ன நினைக்கிறார்கள்? என்றால், ஆட்சி பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம். சில கவர்ச்சி திட்டங்களை செய்தோம். மறுபடியும் பதவி மோகத்துடன் தேர்தலுக்கு தயார் ஆவோம் என்று நினைக்கின்றனர். ஆனால், எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல. பொறுப்பு தான். அதிகாரம் சாமானியனுக்காக போராடுவது.பள்ளிக்கு பசியுடன் வரும் குழந்தைகளை பார்த்து காலை உணவு திட்டத்தை தொடங்கினேன். காலை உணவு திட்டம் என்பது வாக்கு அரசியலுக்காக தொடங்கியதா? கொரோனாவில் பெற்றோரை இழந்த 11,700 குழந்தைகளுக்கு 517 கோடி ரூபாய் வழங்கியது வாக்கு அரசியலா? கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கினோம்.பொது மக்கள் நம்பிக்கையை பெறுவதே வாக்கு, அந்த நம்பிக்கையை பெறும் கொள்கை எங்களிடம் உள்ளது. வாக்கு என்பது மக்களின் நம்பிக்கை பெறுவதற்கான அடையாளம். நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதையும் பாருங்கள்: இது என்ன வாக்கு அரசியலா? திடீரென TONE-ஐ மாற்றி முதல்வர் கொடுத்த பதிலடி..! | CMStalin | StalinSpeech