கடந்த ஒரு வருடத்தில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடுமையான இழப்பீட்டையே சந்தித்தனர். சுமாராக மூன்று சதவீதம் அளவில் சரிவை சந்தித்தார்கள் முதலீட்டாளர்கள்.ஆனால், மாற்றி யோசித்தவர்கள், தங்கத்தில் முதலீடு செய்து லாபத்தினை, ’அலேக்’ ஆக அள்ளி உள்ளனர். காரணம், தங்கத்தின் விலை, பாதுகாப்பான முதலீடு. தங்கத்தின் மீதான முதலீடு கடந்த ஒரு வருடத்தில் சுமாராக 48 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம்... தங்கம்... தங்கம்... சாமானியர் முதல் கோடீஸ்வரர் வரை சொக்கி கிடக்கின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டில், 53 சதவீதம் பேர், தங்க ஆபரணங்களுக்காகவும், 28 சதவீதம் பேர் முதலீட்டுக்காகவும், மீதமுள்ள தங்கம் - வங்கி, தொழில்துறை சேமிப்புக்காகவும் வாங்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை என்ன தெரியுமா?ஆபரண நகை விற்பனைக்காக, 40 சதவீத தங்கம் மட்டுமே வாங்கப்படுகிறது. விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தால் சாமானியர் என்ன செய்வார்கள்?29 சதவீத தங்கம் முதலீட்டுக்காக வாங்கப்படுகிறது. 24 சதவீத தங்கம், வங்கிகளால் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 7 சதவீத தங்கம் தொழில்துறை தேவைக்காக வாங்கப்படுகிறது. ஆக, முதலீடு அதிகரித்துக் கொண்டே செல்வதால், தங்கத்தின் விலை அதிகரிப்பால் நெருங்கி, தொட்டு கூட பார்க்க முடியவில்லை... தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும், மக்களின் மோகம் குறைந்தபாடில்லை. அதேநேரத்தில், தங்கம் மீதான ஈர்ப்பால், 22 காரட் தங்க நகைகளுக்கு பதிலாக, 18 காரட் தங்க நகைகளுக்கு மாறிவிட்டனர். ஏன்? 9 காரட் தங்க நகைகளை வாங்கவும் வந்து விட்டனர். புதியதாக, தற்போது தங்க நகைகளை வாங்க முடியாத நிலையில், தங்களிடம் இருக்கும் 22 காரட் தங்க நகைகளை, 9 காரட் தங்க நகைகளாக மாற்றி வருகின்றனர்.தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்திலே குறைவதுண்டோ? மக்கள் மாறத் தொடங்கி விட்டனர். சென்னையில் இன்று காலை அக்.07 செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 90,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 89,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 அதிகரித்து 11,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை விட அதிர்ச்சி தெரியுமா? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, ஒரு டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 88 ரூபாய் 78 காசுகளாக இருக்கிறது. எல்லாரும் பாதுகாப்புக்கு தங்கத்தை வாங்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், சாமானியர்கள் இருக்கின்ற தங்கத்தை விற்காமல் பாதுகாக்கவே படாத பாடுபடுகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், ஒரு சவரன் ஆபரண தங்கம் 87 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது. ஒரே வாரத்தில், 90 ஆயிரம் ரூபாயை தொடப் போகிறது. தொட்டு விடும் தூரம் அதிகமில்லை. ஒரே நாளில் உலக சந்தையில் சுமாராக 1.35 சதவீதம், தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2024ல் சுமாராக 27 சதவீதம் அளவுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை, இந்தாண்டு 2025ல், பத்து மாதங்கள் கூட ஆகவில்லை, சுமாராக 49 சதவீதம் விலை உயர்ந்து விட்டது. தங்கம் விலை குறையுமா... குறையலாம்... இதெல்லாம் நடந்தால்...அதாவது, போர்கள் முடிவுக்கு வர வேண்டும்... நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர்களும் முடிவுக்கு வர வேண்டும், அமெரிக்கா விதிக்கும் அதீத வரி போல. வங்கிகள், தங்கத்தை வாங்கி குவிப்பதை நிறுத்த வேண்டும், அட்லிஸ்ட் குறைக்கவாவது வேண்டும். உலக பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை முடிவுக்கு வர வேண்டும் இதெல்லாம் நடந்தால், தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அட போங்கப்பா... இதெல்லாம் நடக்கிற காரியமா...?"தங்கம் வரலாற்றில் புதிய உச்சம்" - இனி, இதை தினமும் சொல்ல வேண்டி இருக்கும். அது வரைக்கும், வீட்டில் இருக்கிற தங்கத்தையாவது காப்பாற்றி, வைத்திருப்போம்.