டங்ஸ்டன் ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலோகமாகும், இது உயர்ந்த உருகுநிலை, அதிக அடர்த்தி, உயர் வெப்ப கடத்துத்திறன் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக, கன உலோகக் கலவைகள், கத்தி போன்ற வெட்டும் கருவிகளைத் தயாரிக்க, டங்ஸ்டன் உலோகக் கலவைகள் விண்வெளி மற்றும் வாகனத் தொழில்களில், எஃகு கொண்ட டங்ஸ்டன் கடினமான நிரந்தர காந்தங்களை உருவாக்க பயன்படுகிறது.சுரங்கம், கட்டுமானம், மின் மற்றும் உலோக வேலை இயந்திரங்கள், ஒளிரும் விளக்குகளில் இழையாக, டங்ஸ்டன் உப்புகள், இரசாயன மற்றும் தோல் பதனிடும் தொழில்களில், 3D பிரிண்டிங்கிற்கான அச்சிடும் முனையிலும் அடர்த்தியைப் பொறுத்தமட்டில் தங்கத்துடன் ஒத்திருக்கிறது மற்றும் தங்கத்திற்கு மாற்றாக நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.நீண்ட காலத்திற்கு பளபளப்பை பராமரிக்கும் பாகங்கள், குறிப்பாக மோதிரங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம், வெள்ளி மற்றும் பிற கடத்தும் உலோகங்களுடன் ஆர்க் வெல்டிங்கில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. உலோக வேலைகள், சுரங்கம் மற்றும் பெட்ரோலியத் தொழில்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.உலக அளவில் சீனாவில் இருந்து சுமார் 80% டங்ஸ்டன் உற்பத்தி ஆகிறது. மீதமுள்ளவற்றை வியட்நாம் , ரஷ்யா, கனடா மற்றும் பொலிவியா ஆகியவை உற்பத்தி செய்கின்றன.இந்தியாவில் ராஜஸ்தானில் அதிகளவு டங்ஸ்டன் உள்ளதாகவும் அடுத்தடுத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டங்ஸ்டன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது. ஆனால், அவை வணிகரீதியாகப் பயன்படுவதற்கேற்ற வகையில் கிடைப்பதில்லை என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் தான், ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி தொகுதியிலும் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றதெனப் பார்ப்போம்.கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த சூழலில், மதுரை நாயக்கர்பட்டி கிராமத்தில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்கஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாகவும், இதற்கு வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) தகுதியான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினையில் மக்கள் கொதித்தெழுந்த நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் துணை நிறுவனம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே பரபரப்பான சூழலில், டிசம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமையன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதிமுக திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து இத்தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்த சூழலில், ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.