பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை தர மாட்டோம் என்று, தவெக தலைவர் விஜய் உறுதியுடன் தெரிவித்தார். திருவாரூரில் அவர் பேசியதாவது:ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை, ஓட்டியது நான் தான் என்று மார் தட்டிக் கொண்டவரின் மகன், இப்போது முதல்வராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார்? நன்றாக ஓட வேண்டிய தமிழகம் என்ற தேரை, நாலா புறமும் கட்டையை போட்டு, ஆடாமல் அசையாமல் அப்படியே நிறுத்தி விட்டார். இதை பெருமையாக வேறு கூறிக் கொள்கிறார்.திருவாரூர் சொந்த மாவட்டம் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், திருவாரூர் கருவாடாக காய்கிறது. அப்பா பெயரில் பேனா வைக்க சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லையே. அதிகமாக குடிசைப்பகுதி இருக்கும் ஊர் திருவாரூர். இங்கே இருக்கும் மருத்துவக் கல்லுாரிக்கே வைத்தியம் பார்க்கும் நிலை இருக்கிறது. எல்லா கருவிகளும் வேலை செய்கிறதா, இல்லையே.திருவாரூர் ஒரு மாவட்டத்துக்கு தலைநகர். இங்கு சாலை வசதி கூட சரியாக இல்லை. இந்த மாவட்டத்துல அமைச்சர் இருக்கிறார். அவரது வேலை என்ன தெரியுமா? சிஎம் குடும்பத்துக்கு சேவை செய்வது தான் அவரது வேலை. மக்கள் தான் முக்கியம் என்று அவருக்கு நாம் புரிய வைக்கணும்.டெல்டா விவசாயிகள் கொடுமை ஒன்றை அனுபவிக்கின்றனர். நெல் ஏற்றி, இறக்குவதற்கு ரூ.40 கமிஷன் வாங்குகின்றனர். ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். நான்கரை ஆண்டில் பல கோடி ரூபாய் டெல்டா பகுதி விவசாயிகளிடம் இருந்து பறித்துள்ளனர். இதை சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். உங்களுக்கு, 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம். டெல்டா விவசாயிகளுக்கு 40 என்றால் வயிற்றில் அடித்து நீங்கள் வாங்கிய கமிஷன் தான் நினைவுக்கு வரும். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? எங்கள் கொள்கை, ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி. மனசாட்சியுள்ள மக்கள் ஆட்சி. வெற்றி நிச்சயம் இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார். இதையும் பாருங்கள்: TVK Vijay Tiruvarur Campaign | கூட்டம் ஓட்டா மாறுமா? 8 நிமிடம் மாஸ் காட்டிய விஜய் | MASS FULL SPEECH