நடிகை நயன்தாரா முதல் ஸ்ருதி ஹாசன் வரை தமிழ் சினிமாவில் நடித்த ஹீரோயின்களின் சொத்து மதிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட சில நடிகைகள், நடிப்பையும் தாண்டி தொழில்துறையில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக காஸ்மட்டிக்ஸ், ஆடை மற்றும் பிராண்டட் பொருட்களின் விற்பனையில் முதலீடு செய்துள்ள நடிகைகள், ஹீரோக்களை காட்டிலும் அதிக சொத்து உள்ளவர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில், முதலில் இருப்பவர் நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தனது கேரக்டருக்கு ஆழமான நடிப்பை கொடுத்து உச்சம் தொட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 183 கோடி ரூபாயாக உள்ளது என கூறப்படுகிறது. இவர் நடிப்பையும் தாண்டி, 9Skin மற்றும் Femi9 என்ற பெண்கள் சார்ந்த அழகு பொருட்களின் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுமட்டுமில்லாமல் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அடுத்ததாக, தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து வைத்துள்ள நடிகையாக அனுஷ்கா உள்ளார். அருந்ததி, பாகுபலி திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திய அனுஷ்காவின் சொத்து மதிப்பு 130 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிசையில், அடுத்ததாக தமன்னா.தமது 15 வயதில் பாலிவுட்டில் நடிக்க தொடங்கிய தமன்னா, பாகுபலி, பையா, சைரா நரசிம்ம ரெட்டி, ஜெயிலர் படங்கள் மூலம் பெரிதாக பேசப்பட்டார். திரைப்படங்களை தாண்டி, ஓடிடியில் வெப் சீரிஸ்களில் நடித்து ஃபேம் பீக்கில் இருக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு 110 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. இவர் நடிப்பதை தாண்டி பிராண்டட் பொருட்களுக்கு விளம்பரதாரராகவும், தொழில்துறையிலும் முதலீடு செய்து வருகிறார். பணக்கார நடிகைகளின் வரிசையில் 4வது இடத்தில் சமந்தா உள்ளார். தென்னிந்திய திரைப்படங்களிலும், ஓடிடி வெப்சீரிஸ்களிலும் நடித்த சமந்தா சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். பிராண்டட் ஆடைகள் விற்பனையில் பங்குதாரராக இருக்கும் சமந்தா, தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அடுத்த பணக்கார நடிகையாக த்ரிஷா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 85 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. இதுவரை 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா். அனிமல், புஷ்பா, கீதா கோவிந்தம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. தொழில்துறையில் முதலீடு, விளம்பரங்கள் மூலமும் பணத்தை ஈர்த்து வருகிறார்.அடுத்தடுத்த இடங்களில் 60 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பூஜா ஹெக்டே 7வது இடத்திலும், 50 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் காஜல் அகர்வால் 8வது இடத்திலும், 47 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சாய் பல்லவி 9வது இடத்திலும், 45 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஸ்ருதி ஹாசன் 10வது இடத்திலும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், மிருணாள் தாகூரும் அதிக சொத்து வைத்துள்ள தென்னிந்திய நடிகைகளாக உள்ளனர்.