புதுக்கோட்டை அருகே 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கைகுறிச்சி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், அம்மன் நகர், வேளாளர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாத காலமாக அப்பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏற்கனவே குடிநீர் வழங்கப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திரா கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பெண்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..