ஆசியாவின் முதல் வளைவு அணையாக கருதப்படும், கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள குண்டலா அணையின் (Kundala Dam) பெரிய மதகு திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே அமைந்துள்ளது சேது பார்வதிபுரம் அணை என்று அழைக்கப்படக்கூடிய குண்டலா அணை. சுமார் 851 அடி நீளமும் 154 அடி உயரமும் கொண்ட இந்த அணை, ஆசியாவின் முதல் வளைவு அமைப்பு கொண்ட அணையாக கருதப்படுகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையை சுற்றி, கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்து சிகப்பு எல்லையை தொட்டது. இதனால், அணையின் மூன்றாவது கண் திறக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. முறையாக, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, சங்கொலி எழுப்பப்பட்டு ஐந்து கண் மதகு அமைப்பு உள்ள அணையின் மூன்றாவது கண் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்படுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.