குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருநாளை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலை அணிந்து, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, திரு காப்பு கட்டி, பல்வேறு வேடமணிந்து வந்தனர். பெண்கள் அக்னி சட்டி எடுத்தும், காளி வேடம் அணிந்தும் வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாச சூரசம்ஹாரம் வரும் 2ஆம் தேதி நள்ளிரவு கடற்கரையில் நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.