ஜப்பானில் தற்போது Influenza வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கொரோனா பரவலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விட முடியுமா? கடந்த 2020ஆம் ஆண்டு, சீனாவில் மெல்லத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, ஒரு சில நாட்களிலேயே ஒட்டு மொத்த உலகையும் முடக்கியது. ஒவ்வொரு நாட்டிலும் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தனர். உடல்களை புதைக்க கூட இடமில்லாமல் திணறிய அந்த நாட்கள் எல்லாம், இன்றும் நமது கனவுகளில் வந்து நம்மை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில், ஜப்பானில் தற்போது பரவி வரும் Influenza வைரஸ் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியின் தொடக்கமாக இருக்குமோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சுமார் 3,000 மருத்துவமனைகளில் இதுவரை 4,030க்கும் அதிகமான காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது, அந்நாட்டின் வழக்கமான தொற்றுநோய் வரம்பை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜப்பானில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் உச்சம் தொடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கியுள்ளதால், இது கொரோனா போன்று வேறு எதாவது பெருந்தொற்று பாதிப்பாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. ஓகினோவா, டோக்கியோ மற்றும் ககோஷிமா ஆகிய மாகாணங்களில் இந்த Influenza காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருக்கிறதாம். குழந்தைகளிடையேயும் கூட வைரஸ் பாதிப்பு மோசமாகவே இருக்கிறதாம். எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், மழலையர் காப்பகங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா காலத்தை போலவே மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி போடுமாறும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.தற்போதைய காலகட்டத்தில், மக்களிடையே சர்வதேச பயணங்கள் அதிகரித்து விட்டன. இதனால் மக்கள் வைரஸ் மற்றும் நோய் பாதிப்புகளை புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். இதுவும் இது போன்ற வைரஸ்கள் புதிய சூழலுக்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக் கொள்வதற்கு மற்றொரு காரணமாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.