ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும், விராட் கோலி டக் அவுட் ஆனதாலும், 2 போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதாலும் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். தமது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆன விராட் கோலி, ஆட்டமிழந்து வெளியேறியபோது, அடிலெய்டு மைதான ரசிகர்களை நோக்கி கையசைத்து விடைபெற்றது, அவரது ஓய்வு குறித்த ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயல் சமூக வலை தளங்களில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அடிலெய்டு ஓவல் மைதானம் விராட் கோலியின் ’கோட்டை’ என்றே வர்ணிக்கப்படும் அளவுக்கு, ரசிகர்கள் கொண்டாடியது உண்டு. வெளிநாட்டு வீரர் ஒருவர், இந்த மைதானத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 975 ரன்கள் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கோலி. ஆனால்... அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது ரசிகர்கள் கரவொலியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி இருந்ததால், இந்தப் போட்டியில் ரன் குவிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், வெறும் நான்கு பந்துகள் மட்டுமே நீடித்த அவரது ஆட்டம், ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியின், இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில், ரன் ஏதும் இன்றி, ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது, ரசிகர்கள் மீண்டும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கோலி தனது வலது கையை உயர்த்தி, அமைதியாக ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.கையசைவின் அர்த்தம் என்ன? விராட் கோலியின் இந்த செயல், இயல்பான ஒன்றா? அல்லது அதற்கு ஆழ்ந்த அர்த்தம் உள்ளதா? என்ற விவாதம் ரசிகர்கள் இடையே பற்றிக் கொண்டது. "இதுதான் அடிலெய்டு மைதானத்தில் கடைசி ஆட்டமா? இதனால் தான் ரசிகர்களுக்கு விடை கொடுத்தாரா?" என சிலரும், "ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறும் முடிவை எடுத்துவிட்டாரா?" என்பது போன்ற ஏராளமான கேள்விகளுடன் சிலரும், #KohliRetirement போன்ற ஹேஷ்டேக்குகளை பரப்பினர். கோலியின் தொடர் டக் அவுட்-ஐ விட, இந்த கையசைவு தான் அதிகமாகப் பேசப்பட்டது. தொடரும் மோசமான ஃபார்ம் ஏழு மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ள விராட் கோலிக்கு இந்தத் தொடர் சோதனையாகி விட்டது. பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனவர், இன்று அடிலெய்டிலும் உள்நோக்கி வந்த பந்தில், தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். தனது வலுவான பகுதி என வர்ணிக்கப்படும் பந்துகளில் கூட, அவரால் சரியாக கணிக்க முடியாதது அவரது ஃபார்ம் குறித்த வேதனையை அதிகரித்தது. கோலியின் இந்தச் செயல், ஒரு சாதாரண நிகழ்வா? ஒரு சகாப்தத்தின் முடிவிற்கான முன்னுரையா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவரது ரசிகர்களுக்கு இந்த கை அசைவு, பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.