நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சான்றிதழ் வழங்குவதாக கூறிய பின்னரும் பொதுநலன் கருதி மறு ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரம் இருக்கிறது என தணிக்கை வாரியம் திட்டவட்டமாக கூறிய நிலையில், ஏற்கனவே நீக்கிய காட்சிகளை மீண்டும் நீக்க சொன்னால் எப்படி செய்வது? என கேள்வி எழுப்பிய தயாரிப்பு நிறுவனம், ரிலீஸ் தேதியை தெரிவிக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என அமேசான் OTT நிறுவனம் தங்களுக்கு கடிதம் எழுதியதாகவும் கே.வி.என். நிறுவனம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. மும்பையில் இருந்து சென்னைக்கு கடிதம்ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, தனி நீதிபதி முன்பு KVN தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை வாசித்த தணிக்கை வாரியம் தரப்பு, படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்திய முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை எனவும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியும் தனி நீதிபதி வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாறுதல் கூறிய காட்சிகளை எடிட் செய்த பிறகு புகாரே வந்தது என தெரிவித்தது. சென்னையிலுள்ள மண்டல அலுவலகத்தில் இருந்து மண்டல அதிகாரி தான் ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் கூறியதாக தெரிவித்த வாரியம், இதனால் தான் டிசம்பர் 29ஆம் தேதியன்று சான்றிதழை நிறுத்தி வைக்குமாறு மும்பையில் இருந்து சென்னைக்கு கடிதம் எழுதப்பட்டது எனவும் வாதிட்டது. ஜனவரி 5ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம்இதனையடுத்து, சான்றிதழ் வழங்கும் நடைமுறையை கேட்டறிந்த நீதிபதிகள், தணிக்கை வாரிய உறுப்பினர்கள் படத்தை பார்த்தார்களா? அல்லது அட்வைசரி போர்டு உறுப்பினர்கள் பார்த்தார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, அட்வைசரி போர்டு உறுப்பினர்கள் தான் படத்தை பார்த்தார்கள் என வாரியம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், அட்வைசரி போர்டு படம் பார்த்தாலும் இறுதி முடிவை மும்பையில் இருக்கும் வாரியம் தான் எடுக்கும் என தெரிவித்தது. மேலும், பட வெளியீட்டு தேதியை முடிவுசெய்து விட்டார்கள் என்பதற்காக எங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து, தாங்கள் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என டிசம்பர் 22ஆம் தேதி கூறிய தகவலை திரும்ப பெற்று தான் மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்தோம் எனவும், படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாக ஜனவரி 5ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. மண்டல தலைவருக்கு அதிகாரம் இதனையடுத்து, மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் எவ்வளவு நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, அதற்கு மறு ஆய்வுக்கு முடிவெடுத்த 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும் என வாரியம் பதிலளித்தது. மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், மறு ஆய்வுக் குழுவும் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தால் அடுத்து என்ன? என்று கேள்வி எழுப்ப, அதற்கு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என வாரியம் கூறியது. சான்றிதழ் வழங்குவதாக முடிவு எடுத்த பின்னர் மறு ஆய்வுக்கு அனுப்ப தலைவருக்கு அதிகாரம் இல்லை என கூற முடியாது எனவும் பொது நலனை கருத்தில் கொண்டு மறு ஆய்வுக்கு உட்படுத்த மண்டல தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனவும் வாதிட்டது தணிக்கை வாரியம்.நாங்கள் எப்படி கேட்க முடியும்?வாரியம் தரப்பு வாதம் முடிந்த பின்னர், கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் தொடங்கியது. ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவு தொடர்பான உத்தரவின் நகல் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவே இல்லை என்ற தயாரிப்பு நிறுவனம், வழங்கப்படாத ஒன்றை எதிர்த்து எப்படி வழக்கு தொடுப்பது என கேள்வி எழுப்பியது. டிசம்பர் 18ஆம் தேதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து, 19ஆம் தேதி படம் பார்த்து, 22ஆம் தேதி மாறுதல்களை செய்து முடித்தால் சான்றிதழ் வழங்கப்படும் என வாரியம் கூறியது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிய பின்னர் 25ஆம் தேதி அன்றும் வாரிய உறுப்பினர்கள் படத்தை பார்த்தனர் என்றும், மறு ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதாக எங்களுக்கு வெறுமனே ஜனவரி 5ஆம் தேதி இரவு தகவல் மட்டும் தான் தெரிவிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது. வாரிய உறுப்பினர்களே புகார் தாரராக மாற முடியாது, புகார் அளித்தவர் யார் என்று கூட எங்களுக்கு அப்போதைக்கு தெரியப்படுத்தவில்லை என்ற கே.வி.என்., தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு எதிராக எழுந்த புகாரை தாக்கல் செய்யுங்கள் என நாங்கள் எப்படி கேட்க முடியும் எனவும் வினவியது. இங்கு மட்டும் தான் பிரச்சனைஏற்கனவே நீக்கிய காட்சிகளை மீண்டும் நீக்க சொன்னால் எப்படி நீக்குவது? ஒரே காட்சியை எப்படி இரு முறை நீக்குவது? என கேள்வி எழுப்பிய தயாரிப்பு நிறுவனம், சான்றிதழ் வழங்க கோரி 28ஆம் தேதியில் இருந்து கடிதம் எழுதிய போது தணிக்கை வாரியத்திடம் இருந்து பதிலே இல்லை எனவும் குற்றம் சாட்டியது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கவில்லை என்றால், வழக்கு தொடர இருப்பதாக OTT தளமான அமேசான் நிறுவனமும் தங்களுக்கு கடிதம் அனுப்பியது எனவும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. ஒரு உறுப்பினர் எதிராக இருந்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனம், தற்போது ஒரு நபர் எடுத்த முடிவே இறுதியாக மாறி விட்டது எனவும் கூறியது. தணிக்கை வாரியம் கூறிய பல கருத்துக்கள் இணையத்தில் இல்லை எனவும், சான்றிதழ் வழங்கப்படும் என கூறியதால் தான் வெளியீட்டு தேதியை முடிவு செய்ததாகவும் கூறியது. மேலும், மத்திய கிழக்கு உள்ளிட்ட 22 நாடுகளில் படத்தை வெளியிட சான்றிதழ் பெற்றிருக்கும் போது, இங்கு மட்டும் தான் பிரச்சனையாக மாறியிருக்கிறது எனவும் தயாரிப்பு நிறுவனம் எடுத்துரைத்தது. தொடரும்...இதனையடுத்து, மீண்டும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வாரிய உறுப்பினராக இருந்தால் புகார் அளிக்கக் கூடாது என எந்த சட்டமும் இல்லை எனவும், ஒருவர் புகார் அளித்தாலும் நிபுணர்களை வைத்து சரியா என ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது எனவும், சான்றிதழ் வழங்க வாரியம் முடிவு செய்தால் மத்திய அரசு தடுக்க முடியாது எனவும் கூறி வாதத்தை நிறைவு செய்தது. இதனையடுத்து, ஜனநாயகன் பட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையும் பாருங்கள் - நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை