ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக தவெக மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத் விமர்சித்துள்ளார். தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்தது பணக்கொழுப்பு என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக்கொழுப்பு என அறிவித்துள்ள சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.