சமூக வலைதளங்களில், அதிக பின் தொடர்பவர்களை கொண்ட அரசியல்வாதியாக, தவெக தலைவர் விஜய் உள்ளார். சமூக வலை தளங்களில் அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், நட்சத்திரங்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். தற்போது அனைத்தையும் பகிரும் ஒரு தளமாக சமூக வலைதளம் மாறி உள்ளதால் சோஷியல் மீடியாவில், அரசியல்வாதிகளை அதிகம் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் விஜய் முதலிடத்தில் உள்ளார். விஜய்யை இன்ஸ்டாகிராமில் 1.46 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 77 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். இவரை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 31 லட்சம் பேரும் எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம் பேரும், ஃபேஸ்புக்கில் 1.68 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 6.55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். இந்த வரிசையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 5 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். விஜய் திரை பிரபலம் என்பதால், அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இவை அனைத்தும் ஓட்டுக்களாக மாறும் என்பது சந்தேகமே என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். விஜய்யை காட்டிலும் பிரதமர் மோடியை இன்ஸ்டாகிராமில் 9.75 கோடி பேர் ஃபாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.