41 பேர் உயிரிழந்த கரூர் துயர சம்பவத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, விஜயிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றுள்ளது. கரூர் பிரச்சார கூட்டத்திற்கு தாமதமாக சென்றது ஏன்? என்பது தொடங்கி, அசம்பாவிதம் நிகழ்ந்தும் உடனடியாக இடத்தை காலி செய்தது ஏன்? என்பது வரைக்கும் கேள்விகளை முன் வைத்த சிபிஐக்கு, விஜய் கூறிய பதில்கள் என்ன? சிபிஐ அலுவலகத்திற்குள் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.41 பேர் உயிரிழந்த கரூர் துயர சம்பவத்தில் சிபிஐ சம்மனை ஏற்றுக் கொண்ட விஜய், காலை 6.30 மணிக்கே சென்னையில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், விஜய்யின் நெருங்கிய நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோருடன் டெல்லி பறந்த விஜய், விமான நிலையத்தில் இறங்கி சாலை மார்க்கமாக சிபிஐ அலுவலகம் நோக்கி சென்றார். டெல்லி போலீஸின் பாதுகாப்புடன் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் சென்ற விஜய்யுடன் மொத்தம் 4 கார்கள் சென்ற நிலையில், விஜய்யின் கார் மட்டுமே சிபிஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் நிகழ்வுகள் என்றால் வெள்ளை சட்டை அணிந்து செல்லும் விஜய், சிபிஐ விசாரணைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்றார்.சிபிஐ சொன்ன நேரத்தில் ஆஜரான விஜயிடம் 11.30 மணியளவில் விசாரணை தொடங்கியது. சிபிஐ அலுவலகத்திற்குள் சென்ற நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகிய இருவரை வரவேற்பு அறையிலேயே நிறுத்தி வைத்த சிபிஐ, விஜய்யிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியது.சிபிஐ அதிகாரி முகேஷ் தலைமையில் 4 அதிகாரிகள் கொண்ட குழு, விஜயிடம் விசாரணை நடத்தியது. அந்த குழுவில் தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் முன்வைத்த கேள்விகளுக்கு விஜய் கூறும் பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. முதலில் கரூர் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை விஜய் தொகுத்து கூற, அடுத்தடுத்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. கரூர் பிரச்சாரத்தின் போது கால தாமதமாக சென்றது ஏன்? கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட இடம் நெரிசலான இடம் என்பது முன்கூட்டியே தெரியுமா? எவ்வளவு பேர் வருவார்கள் என்பதும் முன்கூட்டியே தெரியுமா? போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் ஒரு குழந்தை மாயமானதாக அறிவிப்பு வெளியிட்டபோது சம்பவ இடத்தில் அமைதியில்லாத சூழல் நிலவியதா? மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது தெரியுமா? அசம்பாவிதம் நிகழ்ந்ததும் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறியது ஏன்? பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே சிலர் மயக்கமடைந்தார்களே, அப்போதும் பேச்சை நிறுத்தாதது ஏன்? என்பது உட்பட பல கேள்விகள் முன் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.காலை 11.30 மணிக்கு ஆஜரான விஜய்யிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. பிற்பகல் மூன்றே முக்கால் மணியளவில் விசாரணை நிறைவு பெற்றாலும், மாலை 6 மணி வரையில் விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வரவில்லை. விசாரணை முடிந்த பிறகு விஜய் தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தார். விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள், பெறப்பட்ட பதில்களை ப்ரிண்ட் அவுட் எடுத்து விஜய்யிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறைகள் இருந்ததால் விஜய் தனி அறையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இடையில் உணவு இடைவேளைக்காக அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போது, வழக்கறிஞர் மூலம் விஜய்க்கு சைவ உணவு கொண்டு சென்று வழங்கப்பட்டது.இதனையடுத்து, எல்லா நடைமுறைகளும் முடிந்து 6 மணிக்கு மேல் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துச் சென்றார். இரவு டெல்லியிலேயே தாஜ் மானசிங் என்ற நட்சத்திர விடுதியில் தங்கிய விஜய், மறு நாளும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக செவ்வாய்க்கிழமை ஆஜராகுவதில் இருந்து விஜய் விலக்கு கோரிய நிலையில், மீண்டும் வேறொரு நாள் சம்மன் அனுப்பி விஜய்யை விசாரிக்கலாம் என தெரிகிறதுவிஜய்யை தொடர்ந்து கரூர் சம்பவத்தின் போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினார். கரூர் துயர சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் தான் விளக்கம் அளித்தார் என்ற நிலையில், காவல்துறை மீது முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை முடியும் முன்பே விளக்கம் அளித்தது எப்படி என்ற ரீதியிலும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், சிபிஐவிசாரணை இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. விரைவிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் பாருங்கள் - "பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து