தென்னிந்திய திரை நட்சத்திரங்களான, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் கிசுகிசுக்கள், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன. பல நாட்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நம் காதுகளை குடைந்து வந்த கிசு கிசு, தற்போது நிஜமாகி விட்டதால், திரைத்துறையில் டும் டும் டும் சத்தம் கேட்க தொடங்கி விட்டது.அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறிய விஜய் தேவரகொண்டாவும், ’நேஷனல் கிரஷ்’ என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவும், ’கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக, கிசுகிசுக்கள், கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டன. காரணம் படத்தில் இவ்விருவரும் நடித்திருந்த முத்தக்காட்சிகளும், ரொமான்ஸ் சீன்களும் தான். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையேயான ஜோடிப்பொருத்தம் கனக் கச்சிதமாக இருந்தது.இதனிடையே, இதே ஜோடி ’டியர் காம்ரேட்’ திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்ததால், இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து, காதல் மேலும் வலுவடைந்ததாக சொல்லப்பட்டது. அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியாகி, இவர்களை பற்றிய கிசுகிசுக்களுக்கு தீனியளித்து வந்தது. ஆனால், இரண்டு பேருமே தங்களுக்கிடையே ஓடும் காதல் காவியம் பற்றி வாயே திறந்தது கிடையாது.தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட ஜாடை மாடையாக மட்டுமே காதல் தொடர்பான தகவல்களை தெரிவித்து வந்த சூழலில், திடீரென காதலர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவி, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த மே மாதத்தில் இன்ஸ்டாவில் ராஷ்மிகா மந்தனாவை பின்தொடருவதை விஜய் தேவரகொண்டா நிறுத்தியதால், இந்த வதந்தி பரவியது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் இருவரும் கை கோர்த்து வலம் வர, இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி இன்னும் ஸ்ட்ராங் ஆனது.இந்நிலையில் தான் பல நாட்களாக வலம் வந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த ஜோடி.பல நாட்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.இந்த நிச்சயதார்த்த விழா மிகவும் தனிப்பட்ட முறையில், ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல், அவர்களது ரசிகர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.