தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தன்னை அறிவிக்காத அதிருப்தியில், பனையூர் த.வெ.க. அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, விஜய்யின் காரை வழிமறித்து முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் நிர்வாகி வழிமறித்தும் விஜய்யின் கார் நிற்காமல் அலுவலகத்திற்குள் சென்ற நிலையில், அஜிதா ஆக்னல் கண்ணீருடன் கட்சி அலுவலகம் முன்பு காத்திருந்தது ஏன்? அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காத பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்ட செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.த.வெ.க.வில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், விடுபட்ட தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பதவிகள் எதுவும் நியமனம் செயயப்படாமலே இருந்து வந்தது. அதற்கு முக்கிய காரணமே, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அஜிதா ஆக்னலும், எதிர் தரப்பில் சாமுவேல் என்பவரும் அந்தப் பதவியை குறி வைக்க, யாருக்கு தருவது என்ற குழப்பத்தில் அறிவிப்பை நிறுத்தி வைத்தது தலைமை. இந்த சூழலில் தான், மீதமுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை விஜய் அறிவிக்க இருப்பதாக தகவல் வர, காலையில் இருந்து களேபர பூமியாக காட்சியளித்தது பனையூர்.தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு சாமுவேலை மா.செ.வாக தலைமை அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்ததும் ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல், நியாயம் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் வரும் தகவல் அறிந்து, முன்கூட்டியே பனையூர் அலுவலகத்தில் பவுன்சர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில், பெண் பவுன்சர்களும் களமிறக்கப்பட்டு, பேரிகார்டுகள் போடப்பட்டு அதிருப்தி நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அஜிதா ஆக்னல் கண்ணீருடன் பனையூர் வாசலில் சோகம் தவழ்ந்த முகத்துடன் காத்திருந்தார்.இதனால், பனையூர் அலுவலகம் வெளியிலேயே காத்திருந்த அஜிதா ஆக்னலுடன், தொலைபேசியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், மாநில பொறுப்பு தருவதாக சமாதானப்படுத்தவே அஜிதா ஆக்னல் தரப்பு அங்கிருந்து கலைந்து சென்றது.இதனிடையே, பிற்பகல் ஒன்றரை மணியளவில், விஜய்யின் கார் பனையூர் அலுவலகம் நோக்கி வர, திடீரென விஜய் வந்த காரை முற்றுகையிட்டு நேருக்கு நேர் வழிமறித்த அஜிதா, எப்படியாவது விஜய்யை சந்தித்து பேச வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார். ஆனால், பெண் நிர்வாகி குறுக்கே வந்து நின்றும் கூட விஜய்யின் கார் நிற்காமல் அலுவலகத்திற்குள் சென்றது. அப்போது, சில ஆதரவாளர்கள் விஜய்யின் கார் என்றும் கூட பார்க்காமல், காரை தட்டி தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அலுவலகம் வந்த விஜய், அஜிதா ஆக்னலை அழைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெருத்த ஏமாற்றமாக அடுத்த 10 நிமிடத்திலேயே மீண்டும் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றார். இதனிடையே, த.வெ.க.வின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், அஜிதா ஆக்னலுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் கூட அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லாமல், ரோட்டிலேயேவைத்து தான் அஜிதா ஆக்னலுடன் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், சில நாட்களுக்கு முன்பு முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஒருவர் அறிவாலய வாசலில் உறுப்பினர் அட்டையை தூக்கிஎறிந்த சம்பவத்தை குறிப்பிட்டதோடு, அரசியல் கட்சி என்றால் சிலருக்கு மனஸ்தாபம் இருக்க தான் செய்யும் என நியாயப்படுத்தினார்.அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், அதற்காக கட்சி அலுவலகத்திற்குள் கூட அழைத்து பேசாமல் சாலையிலேயே வைத்து பேசுவது தான் ஜனநாயகமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பவே, வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என டைவர்ட் செய்ய பார்த்தார் நிர்மல்குமார்.ஆனால், செய்தியாளர்கள் அஜிதா ஆக்னல் குறித்தே அடுத்தடுத்து கேள்வியை தொடுக்க, வேறு வழியில்லாமல் செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு புறப்பட்டார் நிர்மல்குமார்.விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து சுமார் 7 ஆண்டுகளாக பயணித்து வரும் அஜிதா, தூத்துக்குடி மாவட்ட த.வெ.க.வில் முக்கிய முகமாக அறியப்படுகிறார். அஜிதா ஆக்னலின் அண்ணன் பில்லா ஜெகனும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து புஸ்ஸி ஆனந்துடனான கருத்து வேறுபாடு காரணமாக திமுகவுக்கு தாவி விட்ட நிலையில், அண்ணனை காரணம் காட்டியே அஜிதா ஆக்னலுக்கு, புஸ்ஸி ஆனந்த் பதவி கொடுக்காமல் மறுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே, ஒரு முறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க தன்னிடம் பணம் கேட்பதாக புஸ்ஸி ஆனந்த் மீது புகார் கூறிய அஜிதா ஆக்னல், பனையூர் அலுவலகம் வெளியே கண்ணீருடன் நின்று, இங்கு பெண்களுக்கு மதிப்பே கிடையாது என புலம்பி ஆதங்கப்பட்டார். தற்போதும், கட்சி அலுவலகத்திற்கு நியாயம் கேட்டு வந்த அஜிதா ஆக்னலை உள்ளே அழைத்துகூட பேசாமல், கேட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.கட்சி அலுவலகம் வந்த விஜய்யும் கூட அஜிதா ஆக்னல் பற்றி எதுவும் விசாரிக்காமல் கடந்து சென்றது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த பெண் நிர்வாகியை த.வெ.க. நடத்தும் போக்கு இது தானா? என்ற வினாவும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு தலைமை டிக் அடித்து மா.செ.வாக தேர்வாகி இருக்கும் சாமுவேல் என்பவரும் கூட உள்ளூர் திமுக அமைச்சர் புள்ளியான கீதா ஜீவனின் உறவினர் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், அஜிதா ஆக்னல் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், தூத்துக்குடியில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமூகத்தை சேர்ந்த சாமுவேலுக்கு மாவட்ட செயலாளர் பதவியை புஸ்ஸி ஆனந்த் வாங்கி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.திமுக அமைச்சரின் உறவுக்காரருக்கு மா.செ.பதவியை கொடுத்த தலைமை, அஜிதா ஆக்னலை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றதும் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. புஸ்ஸி ஆனந்தின் தனிப்பட்ட பகைக்காக, கட்சிக்காக ஓடி ஓடி வேலை செய்யக் கூடிய பெண் நிர்வாகியை புறக்கணிப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தியும் கூட பனையூர் அலுவலக வாசலில் இருந்து கலைந்து செல்ல மறுத்து, தனது ஆதரவாளர்களுடன் அஜிதா ஆக்னல் தர்ணாவில் ஈடுபட்டார்.இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக வேலை செய்த புகைப்படங்கள், ஆவணங்களை வீசியெறிந்து அஜிதா புலம்பிக் கொண்டிருக்க, பின் வாசல் வழியாக புஸ்ஸி ஆனந்த் பனையூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.