அமெரிக்காவின் எண்ணெய் தடைகளை தவிர்க்க, வெனிசுலா பயன்படுத்தி வரும் புதிய யுக்தி தான் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கப்பலின் அடையாளத்தை மறைத்து சர்வதேச வழித்தடத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தி அமெரிக்காவின் கண்ணில் வெனிசுலா மண்ணை தூவி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.வெனிசுலா பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றம்சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவுக்குள் நுழையவும், வெளியேறவும் அதிரடியாக தடை விதித்தார். தடையை மீறி எண்ணெய் கப்பல்களை வெனிசுலா இயக்கி வந்த நிலையில், அதனை தடுக்க வேண்டும் என அமெரிக்கா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது. மேலும், கரீபியன் கடல் பகுதியில் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், உளவு விமானம் மற்றும் துருப்புகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்க படைகள், கடந்த 10ஆம் தேதி வெனிசுலா கடற்கரையோரத்தில் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால், வெனிசுலாவில், நிக்கோலஸ் மதுரோ அரசு மீது அமெரிக்காவின் அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல் தான், இதுவரை அமெரிக்கா கைப்பற்றியதிலேயே மிக பெரியது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல், அமெரிக்காவின் எண்ணெய் தடைகளை தவிர்ப்பதற்காக, வெனிசுலாவால் பயன்படுத்தப்படும் Ghost fleet என்று அழைக்கப்படும், அடையாளங்களை மறைத்து இயக்கப்படும் மறைமுகக் கப்பல் படைகளில் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மறைமுகக் கப்பல்கள் பயன்படுத்தும் பொதுவான யுத்திகளில் ஒன்று, அவற்றின் பெயர் அல்லது கொடியை அடிக்கடி மாற்றுவதாகும். சில சமயங்களில் அவை ஒரு மாதத்திற்குள் பல முறை கூட மாற்றப்படுகின்றன.உதாரணமாக, அமெரிக்கா கைப்பற்றிய டேங்கர் கப்பல் தி ஸ்கிப்பர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கப்பலுக்கு, லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு நிதியளிக்க உதவும் எண்ணெய் கடத்தலில் பங்கு இருப்பதாக கூறப்பட்டு, 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தடை விதித்தது. அந்த நேரத்தில், கப்பலுக்கு அடிசா (Adisa) என்று பெயரிடப்பட்டது. ஆனால், அதன் அசல் பெயர் டோயோ (Toyo) எனக் கூறப்படுகிறது. சர்வதேச கடல் சார் அமைப்பால் ஒதுக்கப்பட்ட தனித்துவமான பதிவு எண்களை பயன்படுத்தி, அப்புறப்படுத்தப்பட்ட கப்பல்களின் அடையாளத்தைத் திருடி, இந்த மறைமுக கப்பல்கள் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், 'வராடா' என்று பெயரிடப்பட்ட ஒரு கப்பல், வெனிசுலாவில் இருந்து இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு மலேசிய கடற்பரப்பை அடைந்தது. கிழக்கு ஆப்ரிக்க கடற்கரையோர தீவு நாடான கோமரோஸின் கொடியை ஏந்தியபடி சென்ற அந்த கப்பல் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், BLOOMBERG ஆய்வில், அந்த கப்பல் 2017ஆம் ஆண்டே வங்க தேசத்தில் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்புறப்படுத்தப்பட்ட கப்பல்களின் அடையாளங்களை திருடி எண்ணெய் கடத்தலில் வெனிசுலா ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவை ஏமாற்றி Ghost fleet எனப்படும் மறைமுக கப்பல்கள் மூலம் எண்ணெய் கடத்தலில் வெனிசுலா ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் நிலையில், வெனிசுலா போன்ற அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் அல்லது நிறுவனங்களும் அமெரிக்காவின் தண்டனைக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதற்கிடையே உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான ஜெரால்ட் ஃபோர்ட்-ஐ, கரீபியன் நீர்ப்பரப்பில் அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளதன் காரணமாக, மறைமுகக் கப்பல் படையை நம்பிச் செயல்படும் மதுரோவின் எண்ணெய் வர்த்தக திறன் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.