சேலம் சூரமங்கலம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் போதை பொருளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது. போதை பொருளை ஒழிப்பது குறித்து மாணவர்களையும் உறுதிமொழி ஏற்க வைக்கும் காவல் உதவி ஆய்வாளரின் பணி மேலும் தொடர வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்..கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட செயல்களுக்கு அடித்தளமாக உள்ள போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக தடுக்கலாம் என்பதே இந்த இளம் பெண் காவல் உதவி ஆய்வாளரின் விழிப்புணர்வு வாசகம்.. சேலம் மாநகர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் புவனேஸ்வரி. போதைப் பொருள், பிளாஸ்டிக், ஆன்லைன் மோசடி குறித்து சமூகவலைதளங்களிலும் பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர் மாணவர்கள் மத்தியில் மனம் கவர்ந்த காவலராக வலம் வருகிறார்.காவல் பணிகளுக்கிடையே பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் புவனேஸ்வரி, போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்களையும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க வைப்பதை தலையாய கடமையாக செய்து வருகிறார்..போதை பொருட்களில் என்னதான் உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் சில கல்லூரி மாணவர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சில மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் அதனை தொடர்வதாகவும் தனது விழிப்புணர்வு வீடியோக்களில் கூறி உள்ள புவனேஸ்வரி, மாணவர்களின் பெற்றோர்கள் சரியாக கண்காணித்தால் போதைப்பொருள் பழக்கத்தை நிச்சயமாக தடுக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. மனஉளைச்சல், பணிச்சுமை என புலம்பும் பல காவலர்களுக்கு மத்தியில் இளைய சமுதாயத்தை எழுச்சிபெற செய்யும்நோக்கில் விழிப்புணர்வு செய்து வரும் புவனேஸ்வரியின் செயல் பலரது மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது..