இந்து மக்களை ஏமாற்றவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லாத சமத்துவ பொங்கலை கொண்டாடுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிய நிலையில், தமிழர் என்ற அடையாளத்தில் மத நல்லிணக்கத்தோடு பொங்கல் கொண்டாடுவதால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாக திமுக எம்.பி. சல்மா பதிலடி தந்திருக்கிறார்.எத்தனையோ பண்டிகைகள், விழாக்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டாலும் பொங்கல் பண்டிகையை மட்டும் தான் தமிழர் திருநாள் என்ற அடைமொழியுடன் நாம் விளிப்பதுண்டு. காரணம் மற்ற பண்டிகைகளுக்கு பின்னால் குறிப்பிட்ட மதமோ, சாதியோ தான் காரணமாக இருக்கும் ஆனால், பொங்கல் பண்டிகை மட்டும் தான் சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டியே தமிழ்நாட்டிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஊர் தோறும் களைகட்டும்.வரலாறு இப்படி இருக்க, பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசனோ, சமத்துவ பொங்கலுக்கு எதிரான கருத்தை தெரிவித்து பரபரப்பை கூட்டியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், தமிழ்நாட்டில் எங்காவது சிறுபான்மையினர் சூரியனை வழிபட்டு பொங்கல் கொண்டாடுகிறார்களா? எதற்காக அவர்களை அழைத்து இல்லாத ஒன்றை திமுக கொண்டாடி வருகிறது? என்றும் சர்ச்சைக்குரிய கேள்வியை முன்வைத்துள்ளார். வானதியின் இந்த பேச்சு தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.அவரது இந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கும் திமுக எம்பி சல்மா, இஸ்லாமியர்களை குறை சொல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே வானதியின் எண்ணம் என்றும், ஆண்டாண்டு காலமாக தமிழர் என்ற அடையாளத்தில் மத நல்லிணக்கத்தோடு கொண்டாடுவதால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.பொதுவாகவே பொங்கல் பண்டிகை என்பது எந்த ஒரு கடவுளின் பெயராலும் நடத்தப்படும் திருவிழா இல்லை என்பது ஊரறிந்த உண்மை. தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றும் பொங்கல் திருநாள், அறுவடைத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வேளாண் குடிகள் இயற்கையை போற்றும் வகையில், சூரியனை வழிபடும் நாளாக இந்த பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. முதல் நாள் சூரியனையும் இரண்டாம் நாள் கால்நடைகளையும் மூன்றாம் நாள் உற்றார் உறவினர்களையும் போற்றி வணங்கும் திருநாளே பொங்கல் திருநாள் என தமிழர் வரலாறு கூறுகிறது. இஸ்லாமியர்கள் இயற்கையை வழிபடுவதில்லை என்றாலும் தமிழர், உழவர் என்ற அடிப்படையில் பொங்கல் விழாக்களில் ஒற்றுமையுடன் பங்கெடுப்பதுண்டு. அதனடிப்படையில் தான் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் மும்மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறது. பொங்கல் பண்டிகையை வரலாற்று ரீதியாக சமத்துவமாக கொண்டாடிவரும் அதே சூழலில் சமத்துவ கிறிஸ்துமஸ், சமத்துவ ரம்ஜான் என மதங்களை கடந்து மக்கள் ஒன்றிணைந்து பண்டிகைகளை கொண்டாடி வரும் சூழலில், தமிழர் வரலாற்றை நன்குணர்ந்த வானதியே தன் கட்சிக்கு விசுவாசத்தை காட்ட இப்படி பிளவுவாத கருத்தை முன்வைக்கலாமா என தமிழ்கூறும் நல் உலகு அவரை நோக்கி கேள்வி எழுப்புகிறது. இதையும் பாருங்கள் - CBI ஆபீசுக்குள் நுழைந்த தவெகவினர்