போரை நிறுத்தாவிட்டால் டோமஹாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க தயங்க மாட்டேன் என்று, ரஷ்ய அதிபர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அண்மையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரை கைவிடும்படி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் வரும் என உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம், ரஷ்யாவுக்கு இல்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார்.இதையடுத்து, டிரம்ப் - புதின் இடையே பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேரங்களிலேயே உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா, உக்ரைனின் கோலோடியாஸி (Colodiyasi) கிராமத்தையும், அதற்கு அடுத்துள்ள வோரோன் (Veron) கிராமத்தையும் கைப்பற்றியது. சுமார் 85 ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை கொண்டு இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்தது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற போரை, பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ட்ரம்ப், ரஷ்யா - உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான், மூன்று ஆண்டுகளாக தொடரும் போரை ரஷ்யா விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டோமஹாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க தயங்க மாட்டேன் என்று ட்ரம்ப், புதினுக்கு எச்சரிக்கை விடுத்தது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசி இருப்பதாவது;இந்த ஏவுகணைகளை அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு விற்காது. அதற்கு பதிலாக, அவற்றை நேட்டோ அமைப்பிற்கு வழங்குவோம். அங்கிருந்து அவை உக்ரைனியர்களுக்கு வழங்கப்படும். போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்ய நேரிடலாம். போர் மேலும் தீவிரமடைவதை நான் விரும்பவில்லை. புதின் சிந்தித்து செயல்பட்டால் நல்லது. இவ்வாறு டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.ட்ரம்ப் கூறியிருந்த டோமஹாக் ஏவுகணைகள் பொதுவாக கடலில் இருந்து ஏவப்படும் நீண்ட தூர குரூஸ் ஏவுகணைகள். இவை சுமார் 2,500 கிமீ அதாவது 1,550 மைல்கள் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. 20 அடி நீளமும் 1,510 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணைகள், 1991ஆம் ஆண்டு நடந்த பாரசீக வளைகுடா போரில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இதன் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி, சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு வேளை உக்ரைனுக்கு, இந்த டோமஹாக் ஏவுகணைகள் வழங்கப்பட்டால், ரஷ்யாவின் ஆழமான ராணுவ தளங்கள், தள வாட மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள் போன்ற தற்போது எட்ட முடியாத இலக்குகளை தாக்கும் வலுவை பெறும் எனத் தெரிகிறது.