மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் பண்ணை வீட்டில் தங்கிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளார்.நெல்லையில் இயங்கி வரும் ஐடி தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் சோகோ ஐடி நிறுவனத்தை தர்மேந்திரா பிரதான் பார்வையிட்டு, இளைஞர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள ஸ்ரீதர் வேம்புவின் பண்ணை வீட்டில் மத்திய அமைச்சர் இரவு தங்கினார். இந்நிலையில், அங்கிருந்த மின்சார ஆட்டோவை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இயக்கிப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். முன்னதாக, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.