தவெகவை முடக்க முயற்சி நடப்பதாகவும், வழக்கறிஞர்கள் கிடைக்க கூடாது என்பதற்காக, பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா, டெல்லியில் கூறி இருப்பதாவது:உண்மையை பதிவு செய்ய வேண்டும், காவல்துறை பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. ஆனால், எப்போதும் இல்லாத அளவில் நாமக்கல் மக்கள் ஆதரவுடன் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, கரூருக்கு வந்தோம். விஜய் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. காவல்துறை சொன்ன நேரத்தில் தான் போனோம். நாங்கள் 16 நாட்கள் பேசாமல் இருக்கிறோம். உண்மையை பேச வேண்டும். கரூரில், காவல் துறையினர் தான் எங்களை வரவேற்றனர். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்கள் தான் திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். எல்லாம் வசதியா? என்று கேட்டு விட்டுத் தான் விஜய், மேலே வந்தார். ஏன் காவல்துறை, கரூர் மாவட்ட எல்லையில் வரவேற்க வேண்டும்?பேச ஆரம்பிக்கும் போது, மக்களைப் பார்த்து தான் விஜய் பேசினார். ஆம்புலன்ஸ்-க்கு எங்கே வழி விட வேண்டுமோ, அங்கே வழி விடச் சொன்னார். தண்ணீர் கேட்கும் போது அவரே கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை. எந்த பிரச்சினையும் இல்லை, மக்களைப் பார்த்து எவ்வளவு ஷார்ட் ஆக முடிக்க முடியுமோ, அப்படி பேசி முடித்தார். இந்த இடத்தில், எந்தளவுக்கு, தவெகவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுத்தோம். தமிழக அரசு மீதும், தமிழக அரசின் விசாரணை மீதும் எங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை? என்றால், கரூர் எல்லையில், நான், பொதுச் செயலாளர், அருண்ராஜ் உள்ளிட்டோர் காத்துக் கொண்டிருந்தோம். காவல்துறையினர் வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும் என்று எச்சரித்தனர். அதையும் தாக்கல் செய்துள்ளோம். ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களையும், ஒட்டுமொத்த கட்சியையும் தடியடி நடத்தி, தீவிரவாதிகள் போல் நடத்தியதையும் நாங்கள் பதிவு செய்தோம். நாங்களும் மனிதர்கள் தான், இறப்பு ஏற்பட்ட உடன், 4 நாட்களுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனிதாபிமனம் எங்களுக்கு உள்ளது. வீட்டில் யாராவது இறந்தால், மீடியா முன்பு வந்து பேசிக் கொண்டே இருக்க மாட்டோம்.இந்த சந்தர்ப்பத்தை திமுக பயன்படுத்தி, என்ன நாடகம் ஆடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மக்களுக்குத் தெரியும். அந்த நாடகத்துடன் சட்டரீதியாக போராடக்கூடாது என்று இருந்தோம். மிகப்பெரிய திட்டமிடல். பேட்டி கொடுத்தால், யூ டியூபர்ஸ் கைது செய்யப்பட்டனர். தவெக மீது எப்படி பொய்க் குற்றச்சாட்டு சொல்லலாம் என்று சொன்னார்கள். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக அரசு செய்ய முயற்சித்தது. எங்கள் தலைவர் விஜய் கொடுத்த அறிவுறுத்தல்படி செயல்பட்டோம்.இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறி உள்ளார்.