ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் கடும் பனிப்பொழிவு காரணமாக, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையே தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து காணப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், துலைல் பள்ளத்தாக்கு, தோடா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக சாலைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.தோடா பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, காண்டோ பலேசா மலைப் பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சி தருகிறது. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் பனிப்பொழிவால் நிரம்பி காணப்பட்டது. ஓடுபாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், விமான சேவையும் பாதிக்கப்பட்டது.