அரியானா மாநிலம் ஹிசாரில் வசித்து வரும் பெண் தனது தாயை அடிக்கடி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாயார் நிர்மலாதேவி, படுக்கையில் உட்கார்ந்திருக்கும்போது மகள் ரீட்டா, தன்னுடைய அம்மாவை திட்டிக்கொண்டே அவரை காலிலேயே கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயின் அலறல் சத்தத்தைக்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாயை தொண்டை பகுதியில் காலை வைத்து சித்ரவதை செய்துள்ளார் அரக்க குணம் படைத்த மகள் தன்னுடைய தாயின் தலைமுடியை பிடித்துக்கொண்டு அடித்ததில் தாய் வலி தாங்க முடியாமல் கதறியழுத நிலையில் “என்னை விட்டுடும்மா” என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியுள்ளார். அப்பொழுதும் கூட மகள் தாயை விடுவதாக இல்லை "நீயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பே?" என்று ஏளனமாக பேசி ஒருகட்டத்தில் மேலும் ஆவேசம் அடைந்த மகள், "உன்னுடைய ரத்தத்தையே குடிப்பேன்" என்று கூறி மீண்டும் மீண்டும் அம்மாவை அடித்து கொடுமை செய்துள்ளார்.இதனையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட அந்த பெண் மீது அவரது சகோதரர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஏற்கனவே, ஒரு சொத்தை ரூ.66 லட்சத்துக்கு விற்றதாகவும், இப்போது குடும்பத்தின் பெயரிலுள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்குமாறு அம்மாவை, சகோதரி ரீட்டா அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன் அம்மா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், சகோதரி அம்மாவை சிறைபிடித்து வைத்துக்கொண்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறி சகோதரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரீட்டாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தாயை, மகளே அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி இணையவாசிகளின் கடுமையான கண்டனங்களை பெற்றுவருகிறது.