நீண்ட தூர பேருந்து பயணத்தின் போது, தண்ணீர் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். இனிமேல் பேருந்துகளில், பத்து ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கிக் கொள்ளலாம். கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்டர் பாட்டில் விற்பனை திட்டம் கைவிடப்பட்டது ஏன், அதை மீண்டும் செயல்படுத்த என்ன காரணம் என்பதை பார்க்கலாம்...நீண்ட தூர அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்பவர்கள், வழியில் எங்காவது ஹோட்டலில் பேருந்தை நிறுத்தினாலோ அல்லது டோல்கேட் வந்தாலோ வாட்டர் பாட்டில் வாங்க தவிப்பார்கள். இப்படி பேருந்து பயணத்தின் போது தண்ணீர் இன்றி, தவிப்பதை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ரூ.10 வாட்டர் பாட்டில் விற்பனை திட்டம். இந்த திட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. அரசு பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் குறைந்த விலையில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலை விற்பனை செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு அம்மா குடிநீர் சுத்திகரிப்பு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்த திட்டம் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. நாளடைவில் நிலத்தடி நீர் குறைந்ததால், நாளொன்றுக்கு 45 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் 10 ரூபாய் தண்ணீர் பாட்டில்களின் விற்பனையும் குறைந்தது. கொரோனா காலங்களில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியதால், மெல்ல மெல்ல இழுத்து மூடப்பட்டது. இந்த சூழலில், தற்போது மீண்டும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதாவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்ய இணையவழி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.இதன் மூலம் விரைவில், அரசு விரைவு பேருந்துகளில் பத்து ரூபாய்க்கு வாட்டர் பாட்டில்களை பெறலாம். நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.