காரைக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மேயர் முத்து துரையால் ஏற்பட்ட சர்ச்சையே அடங்கவில்லை, அதற்குள் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுப்பதுபோன்று பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. ஆபாச வார்த்தையால் மேயர் பேசிய ஆடியோவை கேட்கும் பலரும் முத்து துரையை கண்டிக்க வேண்டிய கட்சி தலைமை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்..கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காரைக்குடியில் முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் பிரகாசுக்கும், திமுக கவுன்சிலர் சித்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அமைதிப்படுத்த வேண்டிய மேயர் முத்துதுரை எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் சண்டையை மேலும் சூடாக்கினார். அதிமுக கவுன்சிலர் பிரகாஷை நோக்கி யோவ் நீ கிழிச்சதெல்லாம் தெரியும் வெளியே போயா என ஒருமையில் சீறிய மேயர் முத்துதுரை, குறிப்பிட்ட 5 செய்தியாளர்களுக்கு மட்டும்தான் கூட்டத்தில் அனுமதி என்றும் புது ரூல்ஸ் போட்டார். குறிப்பிட்ட அந்த 5 செய்தியாளர்கள் மட்டும்தான் முத்துதுரைக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவார்களா? அதனால்தான் அந்த 5 செய்தியாளர்களுக்கு ஸ்பெஷல் அனுமதியா? என பலரும் விமர்சனம் செய்தனர்.. இந்நிலையில் முத்து துரை தற்போது ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுப்பதுபோன்ற செல்போன் உரையாடல் வெளியாகி உள்ளது. காரைக்குடி சூடாமணிபுரத்தில் மனை எண் S 57 எண் கொண்ட சொசைட்டி இடத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனி விஜயராகவன் என்பவர் ரூ.6 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதே இடத்தை, அப்போது நகர்மன்ற தலைவராக இருந்த தற்போதைய மேயர் முத்து துரை 10 ஆண்டுகளுக்குப்பின் சீனி விஜயராகவன் 74 ஆயிரத்திற்கு தனக்கு விற்றதாக போலி ஆவணம் தயார் செய்து ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சீனி விஜயராகவனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப்பின் பள்ளத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவருக்கு 67 லட்சத்திற்கு சீனி விஜயராகவன் இடத்தை விற்றதாக தெரிகிறது. இது தொடர்பாக கணேஷ்குமாரின் உறவினர் கணேசனை தொடர்பு கொண்டு முத்து துரை பேசியதுபோன்று அந்த ஆடியோ உள்ளது..நீதான் அந்த இடத்தை வாங்கியதா? என முத்து துரை கேட்பதுபோன்று உள்ள அந்த ஆடியோவில் தனது உறவினர் வாங்கி உள்ளதாக கூறும் கணேசனிடம், அந்த இடத்திற்குள் யார் நுழைந்தாலும் வெட்டுதான் விழும் என மேயர் கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் கூடவே ஆபாசமாகவும் பேசுவதுபோன்றும் உள்ளது..