தான் நடித்த படத்துக்கே, லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டுதான் யோகி பாபு, புரோமோஷன் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வட்டமடித்து வந்த நிலையில், மார்க் பட நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் அவர் டென்ஷனாகினார். அதே நிகழ்ச்சியில் பெண் நடிகைகளை பற்றி கேட்ட கேள்வியால், நடிகர் கிச்சா சுதீப்பும், கடுப்பான நிலையில் மார்க் பட நிகழ்ச்சி சர்ச்சைக்கு மார்க்காகி போனது.படத்தில் நடித்து சம்பளம் வாங்குவதோடு சரி, அப்படங்களின் புரோமோஷனில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, யோகி பாபு கடுகடுப்பில் பதிலளித்துள்ளார். திரைத்துறையில் காமெடி கேரக்டரில் மட்டுமே கலக்கி வந்த யோகி பாபு, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிஸியான நடிகராக உள்ளார். திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபு, தான் நடிக்கும் படங்களின் புரோமோஷனுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. புரோமோஷனில் கலந்து கொள்ளாத நயன்தாரா, அஜித் உள்ளிட்ட பெரும் நடிகர்களின் வரிசையில், யோகி பாபுவும் இணைந்ததாக இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.பணம் கொடுத்தால் மட்டுமே யோகி பாபு தனது பட புரோமோஷனில் கலந்து கொள்கிறார், இல்லையென்றால் பெரிய படங்களுக்கு மட்டுமே புரோமோஷன் செய்கிறார் என குற்றச்சாட்டு இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் கஜானா பட இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜா, 7 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தால் யோகி பாபு இப்பட புரோமோஷனுக்கு வந்திருப்பார் என சீறியதோடு, தான் நடிக்கும் பட புரோமோஷனுக்கே பணம் கேட்கிறார் என்றால், அவர் நடிகராகவே இருக்க தகுதியில்லை என கடுமையாக பேசியிருந்தார்.இந்நிலையில், கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்த மார்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், செய்தியாளர் ஒருவர், பட புரோமோஷனில் கலந்து கொள்வதே இல்லையாமே என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்டார்.அதற்கு பதிலளித்த யோகி பாபு, நேரம் கிடைத்தால் வரபோகிறேன், வெறும் நான்கு காட்சிகளில் நடித்தாலே படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை போல் பேனர் எல்லாம் வைத்து விளம்பரப்படுத்தி விடுவதாக தயாரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் அளித்த பதில், தன்னை வைத்து தான் படமே ஓடுகிறது என்ற மிதப்பில் யோகி பாபு சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்பது போல தான் இருக்கிறது என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.தயாரிப்பாளர் குற்றம்சாட்டிய படத்தில் வெறும் 2 நாட்கள் மட்டுமே நடித்தேன், இப்படத்தை பற்றி மட்டுமே பேசுங்கள் என செய்தியாளர்களிடம் டென்ஷனாகினார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில், அவர் மீதான சர்ச்சைகளும் ஒருபக்கம் கூடி கொண்டு தான் செல்கிறது.கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி ஜாம்பவான்கள் இல்லாமல் திரைத்துறையில் காமெடியன்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. இவர்களுக்கு அடுத்த வரிசையில் வந்த சூரியும் கதாநாயகனாக களமிறங்கிய நிலையில் யோகி பாபுவின் கால்ஷீட்டுக்கு தாயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலைமை தான் இருக்கிறது.சூரியுடனே காமெடியனாக வலம் வந்த சதீஷுக்கும் மார்க்கெட் இல்லாமலே இருக்கிறது. இந்நிலையில், காமெடியன் ரோல்களில் தனிக்காட்டு ராஜாவாக தன்னை நினைத்து கொண்ட யோகிபாபு, சற்று தலைக்கணமாகவே நடந்து கொள்வதாக இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் போதிய படங்கள் கிடைக்காமல் கடினப்பட்டு முன்னேறிய யோகி பாபு, புதுபுது காமெடியன்கள் அறிமுகமானால் தனது மார்க்கெட் அவுட் ஆகிவிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டுமென இணையவாசிகள் கூறுகின்றனர்.அதே நிகழ்ச்சியில், மேடையின் ஓரமாக அமர வைக்கப்பட்டுள்ளதை போல, இப்படத்திலும் ஓரம் கட்டிவைத்துள்ளார்களா என செய்தியாளர் ஒருவர், ஹீரோயினிடம் கேள்வி கேட்கவே, இந்த மாதிரி ஒரு கேள்வியையும் எவரும் கேட்டதில்லை என குறுக்கிட்டு நடிகர் கிச்சா சுதீப் பதிலளித்தார். அப்போது டென்ஷனாகிய கிச்சா சுதீப், ஓரமாக அமர்ந்திருந்த பெண் நடிகைகளை மேடையின் நடுவே அமர வைத்ததோடு, பெண் நடிகைகளை ஓரமாக அமர வைக்க வேண்டுமென்ற உள்நோக்கம் இல்லை எனக் கடுப்பில் பதிலளித்தார்.