பகல் நேரங்களில், நன்றாக இருக்கும் தனது மனைவி, இரவானதும், நாகினி ஆக மாறி, தன்னை கொல்ல முயற்சி செய்வதாக, ஒருவர் ’பகீர்’ கிளப்பி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெராஜ். இவர், மக்கள் குறை தீர் கூட்டம், கடந்த 4ஆம் தேதி நடந்த போது, மாவட்ட நீதிபதியிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதாவது, தனது மனைவி நசீமுன், இரவு நேரங்களில், நாகினி போல சீறி, தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், இது மாதிரி சம்பவம் நடக்கும்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து எழுந்து உயிர் தப்பியதாகவும் கூறி உள்ளார். இரவு நேரம் ஆனாலே, தன் மனைவி பாம்பு போல ‘ரியாக்ட்’ செய்வதாகவும், கடித்து கொல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதாகவும், தினம் தினம் மனைவியால் ’மென்டல் டார்ச்சர்’ அனுபவிப்பதாகவும், குமுறி உள்ளார். கமல்ஹாசன் நடித்த, ’நீயா’ திரைப்படத்தில், காதலன் பாம்பை கொன்றவர்களை, காதலி பாம்பு பழி வாங்கும் கதையை விட இந்த சம்பவம், திகில் ஏற்படுத்தி இருக்கிறது. மெராஜ் கூறிய புகாரை கேட்ட மாவட்ட நீதிபதி ஆடிப் போய் உள்ளார். மனைவி நசீமுன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, இப்படி செய்யலாம் என்று மெராஜ் சந்தேகம் தெரிவித்த நிலையில், அவருக்கே மன ரீதியாக பிரச்னை எதுவும் இருக்கிறதா? என்று யோசித்துள்ளது, மாவட்ட நிர்வாகம். என்ன தான் கணவன் மனைவிக்குள் பிரச்னை வந்தாலும், அது எப்படி பாம்பாக மாறி கடிக்க முடியும்? என்று தலை சுத்திப்போன மாவட்ட நீதிபதி, ’விசாரித்து உரிய நடவடிக்கை எடுங்க’ என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், சமூக வலை தளங்களில் இது தொடர்பாக வரும் பதிவுகள், சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.