இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த போர், தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரில், இதுவரை 67,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனிய மக்கள், காசா பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா தகவல் தெரிவித்துள்ளது. இந்த கொடுமை போதாது என்று, உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் தற்போது வரை சிக்கித் தவித்து வருகின்றனர்.இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதற்கு பலன் கிடைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 11ஆம் தேதி முதல், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் பிறகு தான், இரு தரப்பு பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். எனினும், இதனை கண்காணிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் 200 பேர் காசாவுக்கு செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகத்தின் வீரர்களும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ஏர் போர்ஸ் ஒன் (Air Force 1) விமானத்தில் ஏறுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”காசா அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள தலைவர்களை ஒன்றிணைப்பதற்காக நான் மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொள்கிறேன். நாங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியடைய செய்ய போகிறோம். போர் நிறுத்தத்தால் யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி டிரம்ப் அறிவித்த பின்னர், இஸ்ரேல் நாட்டுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். தற்போது இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர், இன்று எகிப்து நாட்டுக்கும் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் (Sharm - El - Sheik) என்ற சுற்றுலா நகரில் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.