ஆப்பிரிக்க மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி (Mswati III) என்பவர் தனது 15 மனைவிகளுடன் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ தான் இணையத்தில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது எசுவாத்தினி (Eswatini) நாடு. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான். இந்த நாட்டை தற்போது மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு வரும் இவருக்கு மொத்தம் 30 மனைவிகள் என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா?தற்போது 57 வயதாகும் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, அண்மையில், அவரது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்களுடன் பிரைவேட் ஜெட்டில் அபுதாபிக்கு வந்தார். அவரது வருகையால் அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களை மூட வேண்டிய பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி அபுதாபி வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்காவது 30 மனைவிகள் தான். ஆனால், இவரை ஓவர்டேக் செய்தவர், இவரது தந்தையும் முன்னாள் எசுவாத்தி மன்னருமான இரண்டாம் சோபுஷா. இவர் 125 மனைவிகள், 210 குழந்தைகள் மற்றும் 1000 பேரக் குழந்தைகளை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் வழக்கத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், 'ரீட் டான்ஸ்' எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுப்பார். இந்த வழக்கம் உலகளவில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. எசுவாத்தினி நாட்டின் மன்னர்கள் இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழும்போது, மக்களும் இதேபோல் இருப்பார்கள் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எசுவாத்தினியில் 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் வறுமை, மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவது அவரது நாட்டு மக்களாலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கமிருக்க, மறுபக்கம், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர். ‘இது குடும்பமா? அல்லது ஒட்டுமொத்த கிராமமா?, என்றும் ‘இங்கு ஒரு மனைவியையே சமாளிக்கவே முடியவில்லை.. இதுல 30 ஆ!” என்றும் கமென்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.