சீனாவில் ’மாஸ் என்ட்ரி’ கொடுத்ததோடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, உலகளவில் உற்று நோக்கப்பட்டிருக்கு. இந்த மாநாட்டின் விளைவால், கவனிக்க வேண்டியது, இரண்டு விஷயங்கள் தான்... ஒன்று, 50 சதவீத வரி விதிப்பால், "பெரியண்ணன்" போக்கில், மார் தட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா, பிரதமர் மோடியின் சீன பயணத்தைக் கண்டு அலறித்தான் போயிருக்கு... ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை சந்தித்து பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவுடன் பிரதமர் மோடி காட்டிய நெருக்கம், அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், "இந்தியா - அமெரிக்கா மக்களின் நலன்களுக்காக, இரு நாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்வோம்" என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கை;அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவு தொடர்ந்து புதிய உயரத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இது 21ம் நூற்றாண்டின் ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு உறவாகும். நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் மக்கள், முன்னேற்றம் மற்றும் சாத்தியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்பு தான் நமது பயணத்தை நீட்டித்து கொண்டு செல்கிறது. #USIndiaFWDForOurPeople எனும் ஹேஷ்டேக்கைப் பின்தொடர்ந்து, இதன் ஒரு பகுதியாக இருங்கள்.இவ்வாறு அமெரிக்க தரப்பு அறிக்கை வெளியிட்டது. இது, ஒரு புறமிருக்க... ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தனித்து விடப்பட்டுள்ளது பாகிஸ்தான். அந்நாட்டு அதிபர் பரிதவித்து போயிருக்கார். என்ன நடந்தது?ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபரும் நெருக்கம் காட்டி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்து விடப்பட்ட வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதன்பிறகு, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்துக் கொண்டது. இதனிடையே, இந்தியாவை வெறுப்பேற்றும் விதமாக, அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் புதுப்பித்துக் கொண்டது.இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கும் அரங்கில், பிரதமர் மோடியுடன் அனைத்து நாடுகளின் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பேசினார்கள். ரஷ்ய அதிபர் பிரதமர் மோடியை ஆரத்தழுவி, இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விரும்புவதை வெளிப்படுத்தினார்.தொடர்ந்து, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபரும் மும்முரமாக பேசிக் கொண்டே நடந்து சென்ற போது, அருகே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தனித்து விடப்பட்டதைப் போல நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல், பிரதமரின் உரை வீச்சு, பயங்கரவாதத்திற்கு எதிராக இருந்தது, பாகிஸ்தானுக்கு எதிராகவும் இருந்தது. அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது எனக்கூறிய பிரதமர் மோடி, பகல்ஹாம் தாக்குதலை சுட்டிக்காட்ட தவறவில்லை.சில நாடுகள் வெளிப்படையாக பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்-ன்னு பகிரங்கமாக கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது-ன்னு திட்டவட்டமாக பேசினார். இதை அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்... ஆக மொத்தம், பிரதமர் மோடியின் சீன பயணம் அமெரிக்காவை அலற விட்டிருக்கு... பாகிஸ்தானை பரிதவிக்க வச்சிருக்கு...