திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கிச் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற லாரியை OVERTAKE செய்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வழக்கம் போல் சென்றுக் கொண்டிருந்த சக்தி TRANSPORT நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் பேருந்து ஊத்துக்குளி பள்ள கவுண்டம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சாலையில் கவிழ்ந்த பேருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டு பின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் உடல் முழுவதும் நசுங்கி உரு தெரியாத அளவுக்கு படுகோரமாக உயிரிழந்தனர். பெரும் சத்தத்துடன் நடந்த இந்தவிபத்து பள்ள கவுண்டம்பாளையம் பகுதியையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. பேருந்தில் நாலா புறத்தில் இருந்தும் மரண ஓலம் ஓங்கி ஒலித்தது.பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு பயணிகள் தப்பிக்க முயன்றனர். ரத்த காயங்களுடன் வெளியேறிய பயணிகள் கதறியழுதபடி உதவிக்கேட்டு அல்லாடிய காட்சிகள் நெஞ்சை பிசைந்தது. கவிழ்ந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் அக்கம்பக்கத்தினர் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியை சக்தி தனியார் பேருந்து முந்த முயன்ற நிலையில் அதற்கும் முன்னால் மற்றோரு லாரி சென்றுக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் பேருந்தை வலதுபக்கமாக ஓட்டுநர் திருப்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 57 பேர் அமரவைக்கும் வசதி படைத்த பேருந்தில் சுமார் 130 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுநர் சீறிப்பாய்ந்து சென்றதே விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தினந்தோறும் திருப்பூர் TO ஈரோடுக்கு காலை 8 மணிக்கு இரண்டு தனியார் பேருந்துகள் இயங்கி வந்த நிலையில் அதில் ஒன்று வராததால் பேருந்துக்காக வெகுநேரம் காத்திருந்த மக்கள் சக்தி தனியார் பேருந்தில் அதிகளவில் ஏறியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்ற நிலையில் மூச்சை முட்டும் அளவுக்கு நிரம்பிய பேருந்தின் படிக்கட்டுகளும் நிரம்பியிருந்தது. அளவு கடந்த பாரத்தால் ஏற்கெனவே ஒருபக்கம் சாய்ந்த மேனிக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்தை ஓட்டுனர் அதிவேகத்தில் இயக்கியது மட்டுமின்றி, லாரியை OVERTAKE செய்ததாக தெரிகிறது. இருலாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக பயணிப்பதை கவனிக்காமல் லாரியை OVERTAKE செய்த ஓட்டுனர் சடாரென வலதுபக்கமாக பேருந்தை ஒதுக்கவே பேருந்தானது கவிழ்ந்திருக்கிறது. விபத்துக்கு ஓட்டுனரின் கவனக்குறைவு, அதிவேகம், அதிக பாரம் என பலவிதமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் திருப்பூர்-ஈரோடு வழித்தடத்தில் போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 பேரின் நிலையை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த பள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் திருப்பூர் எஸ்.பி. கிரீஷ் யாதவ் அசோக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை அமைச்சர் முத்துச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.