கேரளா வந்துள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் புதைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரை மீட்டனர். நான்கு நாள் பயணமாக குடியரசுத்தலைவர் முர்மு, கேரள மாநிலத்திற்கு வருகை தந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று, அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார்.மோசமான வானிலை காரணமாக, நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர், பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்த ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறக்கம் செய்யப்பட்டது. திரவுபதி முர்மு, ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு தான் ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட்டில் புதைந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட தளம், எடை தாங்காமல் கீழே இறங்கி விட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஹெலிகாப்டரை பத்திரமாக மீட்டனர். குடியரசுத்தலைவர் ஒருவர், தன் பதவி காலத்தில் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.அவர் சபரிமலைக்கு வருவதையொட்டி இரண்டு நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இரண்டு நாட்களுக்கும் ஆன்-லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.