கடைசி படமாக, விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கான வெளிநாட்டு டிக்கெட் விற்பனையில், பிரிட்டன் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. லியோவின் முன்பதிவுகளையும் முறியடித்து, அங்குள்ள ரசிகர்கள் எவ்வளவு டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் தெரியுமா? திரையுலகில் தளபதி என செல்லமாக அழைக்கப்படும், நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி, நெருங்க நெருங்க ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த முறை, இது சத்தமாக இல்லாமல், டிக்கெட் விற்பனையில், வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. ஆம், கடந்த 10 நாட்களுக்கு முன்பே, வெளிநாட்டு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்திலேயே பிரிட்டனில், புது சாதனை பதிவு செய்யப்பட்டது. ஏனெனில், இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ படம் வெளியாவதற்கு முன்பு டிக்கெட் விற்பனை ஆரம்பித்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட் விற்றுத் தீர்த்தது தான் சாதனையாக இருந்தது. இதை முறியடித்தது, ஜனநாயகன் டிக்கெட் விற்பனை. டிச.17ல் பிரிட்டனில் விற்பனை தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 12,700க்கும் மேற்பட்டோர், முன்பதிவு செய்து முடித்து ஷாக் கொடுத்தனர். இது அடுத்த இரு தினங்களில், மேலும் அதிகரித்து 72 மணி நேரத்தில் சுமார் 200K பவுண்ட்ஸ், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 24 கோடி ரூபாய்க்கும் மேல் டிக்கெட் விற்பனையில் வருவாய் ஈட்டித் தந்தது. இது, அடுத்தடுத்த நாட்களில், மேலும் அதிகரித்து 21 ஆயிரம் ப்ரீ புக்கிங்கிற்கு மேல் சென்றது. இந்நிலையில், 24 ஆயிரத்து 500 என்ற எண்ணை எட்டியிருக்கிறது. அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில், ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், பிரிட்டனில் மட்டும் 25 ஆயிரம் டிக்கெட் வரை விற்றுத் தீர்ந்து உள்ளன. படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டிக்கெட் விற்பனை நடந்திருப்பதாகவே சொல்லப்படும் நிலையில், ஜனநாயகன் புதிய சாதனைகளைப் படைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்...