குன்னூரில் நொடிப்பொழுதில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தனியார் பள்ளி இந்தி ஆசிரியை உயிரிழந்த நிலையில், அவரது கணவர் மற்றும் 2 மகள்கள் கட்டிலை விட்டு இறங்காமல் உயிரை தற்காத்து கொண்டனர். மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எதையுமே ஆய்வு செய்யாமல் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும் நகராட்சி நிர்வாகம்தான் மண்சரிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இனியாவது அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அலாய்சேட் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த கார்பெண்டர் ரவீந்திரநாத், தனது மனைவியுடன் வீட்டுக்குள் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் கதவில் கல் வந்து விழுவதுபோன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் ரவீந்திரநாத்தின் மனைவி ஜெயலட்சுமி கதவை திறந்து பார்த்ததும், மழைநீரோடு மண்ணும் உள்ளே புகுந்தது. ஜெயலட்சுமியை வாசலோடு சேர்ந்து மண் சூழ்ந்து கொள்ள மூச்சுத்திணறி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி உயிரிழந்த நிலையில் வீட்டுக்குள்ளும் மழைநீரும், மண்ணும் புகுந்தது. பதற்றத்தில் கட்டிலைவிட்டு இறங்காமல் கணவரும், 10 மற்றும் 6 ஆவது படித்து வரும் 2 மகள்களும் உயிரை தற்காத்து கொண்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு ரவீந்திரன் மற்றும் அவரது மகள்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..இதையடுத்து மண்ணில் புதைந்திருந்த ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் சங்கீதா, காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார், நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.. இதுஒருபுறம் இருந்தாலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு காரணமே நகராட்சி நிர்வாகம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும், அலாய்சேட் காம்பவுண்ட் பகுதியில் மழைநீர் கால்வாய் இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறும் மக்கள், மழை நீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் என அனைத்தையும் ஆய்வு செய்து கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகள் தவிர்க்க முடியும் என்கின்றனர்..