தமிழக வெற்றி கழக மாநாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல்போன கல்லூரி மாணவர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்தார். என்ன ஆச்சோ? ஏதாச்சோ என பதற்றத்தில் இருந்த தாய், பத்திரமாக வீடு வந்து சேர்ந்த மகனை கட்டியணைத்து கண்ணீர் சிந்தியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றார்.விஜய் மாநாட்டில் மாயமாகி நடையாய் நடைந்தும், அலையாய் அலைந்தும் ஒருவழியாக வீடு வந்துசேர்ந்த மகனும் தாயும் கட்டியணைத்து கண்ணீர் சிந்திய காட்சி உறவினர்களையும் கலங்க வைத்தது..நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு எதிர்பார்த்ததைவிட பொறி பறக்க நடந்து முடிந்தது. தானா சேர்ந்த கூட்டம் என்பதுபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் விக்கிரவாண்டி வி.சாலையே திக்குமுக்காடியது. அந்தவகையில் கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன் மகேஸ்வரனும் தனது நண்பர்களுடன் மாநாட்டிற்கு சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல்போன மகேஷ்வரனை, உடன் வந்தவர்கள் தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை..தான் வந்த வாகனத்தை அடையாளம் காண முடியாத மகேஷ்வரன், விக்கிரவாண்டி டோல்கேட்டில் இருந்து நடக்க ஆரம்பித்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்தார். அவ்வழியாக வந்த டிரக் ஒன்றை நிறுத்தி லிப்ட் கேட்ட மாணவன், தன்னை கிருஷ்ணகிரியில் இறக்கிவிடுமாறு கூறி உள்ளார். அப்போது சரியென டிரக் ஓட்டுநரும் தலையாட்டியதால், அசதியாக இருந்த மாணவன் தூங்கிவிட்டான். பட்ட காலிலே படும் என்பதுபோல் மாணவன் சொன்னதையே மறந்துவிட்டு டிரக் ஓட்டுநர் கிருஷ்ணகிரியில் நிறுத்தாமல் சேலத்திற்கு பறந்துவிட்டார்..இதையடுத்து தூக்க கலக்கத்தில் கண்விழித்த மாணவன், தலைவாசலில் இருந்து 54 கிலோமீட்டர் நடந்து கொண்டே இருந்தார். இதனை நீண்ட நேரமாக கண்காணித்த ஒரு முதியவர் மகேஷ்வரனை அழைத்து ஏன் நடக்கிறாய்? என்ன ஆச்சு? என கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி இருக்கிறான் மாணவன். இதையடுத்து மாணவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து, குளிக்க வைத்து, மாற்று உடை கொடுத்து, பேருந்துக்கான பணத்தையும் கொடுத்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார் முதியவர்.அலைந்து திரிந்து மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்த மகனை பார்த்து, எங்கடா போன என கட்டியணைத்து தாய் கண்ணீர் வடிக்க, மகனும் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அழுதார்.. சொந்தபந்தங்களையும் பார்த்து மகேஷ்வரன் அழுத நிலையில் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தனர் உறவினர்கள்.