தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்பு என்றும், புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பொழியும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது, 27ஆம் தேதி காலைக்குள் தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பொருள் ‘அழகு மலர்' ஆகும்.