மத்திய கிழக்கு நாடான ஈரானில், ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் நீர், ரத்த சிவப்பு நிறத்தில் மாறி இருக்கக்கூடிய வீடியோக்கள், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தற்போது, ஈரானில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, ஹார்மூஸ் தீவிலுள்ள கடல் நீர் மற்றும் கடற்கரை பகுதிகள் திடீர் என, ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. பலரும், ஈரானில் ரத்த மழை பெய்துள்ளதாகவும் இதனால் தான் கடல் நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியிருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், உண்மையிலேயே ரத்த மழை எதுவும் பெய்யவில்லை என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதாவது, ஹார்முஸ் தீவு என்பது அரேபியா வளைகுடாவின் ஹர்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ளது. இங்கு, தனித்துவமான செம்மண் நிறைந்துள்ளது. அது ‛கோலக்' என அழைக்கப்படுகிறது. இந்த செம்மண்ணில் இரும்பு சத்து அதிகமாகவும் குறிப்பாக, அயர்ன் ஆக்சைடு மற்றும் பிற கனிமங்களும் நிறைந்துள்ளது. இந்த செம்மண்ணோடு, மழை நீர் கலக்கும்போது ரத்த சிவப்பு நிறத்தில் மாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஹார்முஸ் தீவில் உள்ள கடல் இப்படி ரத்த சிவப்பு நிறத்தில் மாறுவது ஒன்றும் புதிது கிடையாது. இதற்கு முன்பும் பலமுறை இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹார்மூஸ் தீவு, ஈரானின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இது ‛வானவில் தீவு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவின் நிலப்பரப்பில் ரத்த சிவப்பு நிற கடல் மட்டுமில்லாமல் yellow, orange உள்பட பல வண்ண பாறைகள் இருப்பதும் வியக்கும் வகையில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த தீவுக்கு வந்து செல்கின்றனர்.