ரவுடிகளுக்கு அவர்களது மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதன் அர்த்தம் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் என்கவுண்டர் செய்யப்படலாம் என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வீடியோவில் இடம்பெற்ற உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜராகி, காவல் ஆணையர் உத்தரவின் பேரில் எச்சரித்ததாக தெரிவித்தார். அப்போது ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்றதன் அர்த்தம் என்ன என ஆணைய தலைவர் மணிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு இளங்கோவன் தெரியாது என கூறியதால், வரும் 14ம் தேதி காவல் ஆணையர் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.